ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக ஆடினர். அவர்களது விக்கெட்டுக்கு பிறகு ஆட்டம் மந்தமானது. சீரான இடைவெளியில் டெல்லி அணியின் விக்கெட்டுகளை சிஎஸ்கே ஸ்பின்னர்கள் வீழ்த்தினர். முன்ரோ, ஷ்ரேயாஸ், ரூதர்ஃபோர்டு, அக்ஸர் படேல் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், மறுமுனையில் நின்ற ரிஷப் பண்ட்டால் துணிச்சலாக அடித்து ஆடமுடியவில்லை. கடைசி ஓவரில் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் சிக்ஸர் விளாச 147 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது டெல்லி அணி. 

148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கேவிற்கு தொடக்க வீரர்கள் வாட்சனும் டுபிளெசிஸும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதனால் சிஎஸ்கேவின் வெற்றி எளிதானது. 19வது ஓவரில் இலக்கை எட்டி சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்தி, ரன்களை கட்டுப்படுத்தியிருந்தால் டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த சீசன் முழுவதுமே தொடக்க ஜோடியாக சொதப்பிவந்த டுபிளெசிஸ் - வாட்சன் ஜோடி, நேற்றைய போட்டியில் அதிரடியான மற்றும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வெற்றியை எளிதாக்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 81 ரன்களை குவித்தனர். 

டுபிளெசிஸ் அரைசதம் கடந்து ஆட்டமிழக்க, பின்னர் வாட்சனும் அரைசதம் கடந்து உடனடியாக ஆட்டமிழந்தார். எனினும் இவர்கள் இருவரும் இணைந்தே 100 ரன்களை சேர்த்து கொடுத்தனர். இவர்களில் ஒருவரை முதல் ஓவரிலேயே வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை டெல்லி அணி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 

முதல் ஓவரின் மூன்றாவது பந்தை டுபிளெசிஸ் பாயிண்ட் திசையில் அடித்தார். அதற்கு ரன் ஓடும்போது வாட்சனும் டுபிளெசிஸும் செம மறுகு மறுகினர். அந்த பந்தை பிடித்த அக்ஸர் படேல், பவுலிங் முனைக்கு டேரக்ட் த்ரோ விட்டார். அந்த த்ரோ ஸ்டம்பில் அடித்திருந்தால் வாட்சன் அவுட். ஆனால் ஸ்டம்பில் அடிக்காததால் அதை முன்ரோ பிடிப்பதற்குள் வாட்சன் கிரீஸுக்குள் வந்துவிட்டார். 

ஆனால் பேட்டிங் முனையிலிருந்து ஓட தொடங்கி மீண்டும் பேட்டிங் முனைக்கே திரும்பிய டுபிளெசிஸ் பாதி களத்தில் இருந்ததால் முன்ரோ, பேட்டிங் முனைக்கு த்ரோ விட்டார். அதை சரியாக விடாததால் பந்து பின்னால் சென்றது. இதையடுத்து வாட்சன் - டுபிளெசிஸ் ஜோடி ஒரு ரன் எடுத்தது. 

வாட்சன் - டுபிளெசிஸ் ஜோடியின் இந்த தடுமாற்றத்தை பயன்படுத்தி அந்த ரன் அவுட்டை செய்திருக்கலாம். ஆனால் அதை டெல்லி அணி சரியாக செய்யாமல் அந்த அருமையான வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின்னர் இருவரும் இணைந்து போட்டியை தலைகீழாக மாற்றிவிட்டனர். அங்கேயே டெல்லி அணி தங்களது வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த வீடியோ இதோ..