ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிட்டன. 

எஞ்சிய 2 இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கேகேஆர், பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இவற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எஞ்சிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி கிடைத்தாலே அந்த அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும். சன்ரைசர்ஸ் அணியும் நல்ல ரன்ரேட்டுடன் இருப்பதால் அந்த அணியும் ஒரு வெற்றி பெற்றாலே ரன்ரேட்டின் அடிப்படையில் உள்ளே நுழைந்துவிடும். 

சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் வெற்றிகளை பெற்று கொடுத்ததில் முக்கியமான பங்களிப்பு அந்த அணியின் தொடக்க வீரர்களையே சாரும். வார்னர் - பேர்ஸ்டோ தொடக்க ஜோடி அதிரடியான பல தொடக்கத்தை அமைத்து கொடுத்து அந்த அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்தது. குறிப்பாக வார்னரின் அதிரடி மிரட்டலாக இருந்தது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருந்த வார்னர், கடந்த சீசனில் ஆடவில்லை. தடை முடிந்து இந்த சீசனில் மீண்டும் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்தார். 

12 இன்னிங்ஸ்களில் ஆடி 8 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 692 ரன்களை குவித்து, இதுவரை இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக வார்னர் உள்ளார். உலக கோப்பை நெருங்கிவிட்டதால், உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வார்னர், ஆஸ்திரேலியா சென்றுவிட்டார். எனினும் தான் ஆடியவரை சிறப்பாக ஆடி முடிந்தவரை ரன்களை குவித்து அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வார்னர் ஆடாதது அந்த அணிக்கு இழப்புதான். ஆனாலும் அந்த அணியில் வார்னருக்கு மாற்று வீரர்கள் உள்ளனர். 

இந்நிலையில், வார்னர் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை லட்சுமணன் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக நாங்கள் ஷூட்டில் இருந்தபோது, தலைமை பயிற்சியாளர் டாம் மூடிக்கு வார்னர் ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில், இந்த சீசனில் 500 ரன்கள் அடிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்ற அவர் ஆடிய விதமும், வாக்குறுதியை சொன்னபடியே காப்பாற்றியதும், அதற்கு அவர் ஆடிய அர்ப்பணிப்பான ஆட்டமும் அபாரமானது என லட்சுமணன் தெரிவித்துள்ளார்.