ஹர்திக் பாண்டியாவிற்கு சரியான மாற்று ஆல்ரவுண்டர் யார் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார். 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக மதிப்பிடப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறி ஏமாற்றமளித்தது. இந்திய அணியின் தோல்விக்கு தவறான அணி தேர்வே காரணம் என்ற விமர்சனம் வலுத்தது.

இந்த டி20 உலக கோப்பையில் தோற்றாலும், விட்டதை பிடிக்க உடனடியாக இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுதான் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை. இந்த உலக கோப்பையில் சொதப்பியதை மறந்துவிட்டு, இதில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அந்த தவறுகளையெல்லாம் சரிசெய்து அடுத்த டி20 உலக கோப்பையை அணுகுவதே சரியான அணுகுமுறை.

அதை ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி சரியாக செய்யும் என்று நம்பலாம். அடுத்த உலக கோப்பைக்கான தயாரிப்பை, நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தே ஆரம்பித்துவிட்டது இந்திய அணி. டி20 உலக கோப்பை முடிந்த கையோடு, இந்தியாவிற்கு வரும் நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தொடரிலிருந்து விராட் கோலி, பும்ரா, ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டனர். எனவே வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகிய ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இந்த இந்திய அணி குறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரை மனதில் வைத்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த அணி என நினைக்கிறேன். ஹர்ஷல் படேல் டெத் ஓவர்களை அருமையாக வீசுகிறார். ஆவேஷ் கான் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசுகிறார்.

வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல்லில் ஓபனிங்கில் இறங்கினார். ஆனால் அவர் மிடில் ஆர்டரில் ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். ரோஹித், கேஎல் ராகுல், இஷான் கிஷன் ஆகிய மூவரும் தான் முதல் சாய்ஸ் தொடக்க வீரர்கள். இவர்கள் தவிர ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் என மொத்தம் 5 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர்.

எனவே வெங்கடேஷ் ஐயர் மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆடி, 2-3 ஓவர்கள் வீசினால், அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும். ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று ஆல்ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் திகழ்வார். வெங்கடேஷ் ஐயரை எதிர்காலத்திற்கான ஆல்ரவுண்டராக உருவாக்க வேண்டியது அவசியம் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.