சைண்டிஸ்ட் அஷ்வின், நீங்க பண்ணது தரமான சம்பவம்.. வேற லெவல் இன்னிங்ஸ்..! சேவாக் புகழாரம்
வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் ஆடி இந்திய அணியை வெற்றி பெற செய்த ரவிச்சந்திரன் அஷ்வினை சைண்டிஸ்ட் என்று வீரேந்திர சேவாக் தனக்கே உரிய பாணியில் பாராட்டியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 227 ரன்கள் அடிக்க, இந்திய அணி 314 ரன்கள் அடித்தது. 87 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 2வது இன்னிங்ஸில் 231 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது.
மொத்தமாக 144 ரன்கள் மட்டுமே வங்கதேசம் முன்னிலை பெற, 145 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எளிதாக அடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல்(2), கில்(7), புஜாரா(6), கோலி(1) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, 37 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்திருந்தது.
நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட அக்ஸர் படேல் 34 ரன்கள் அடிக்க, மற்றொரு நைட் வாட்ச்மேன் ஜெய்தேவ் உனாத்கத் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தோல்விக்கு அருகில் இருந்தது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் அஷ்வினும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி எஞ்சிய 71 ரன்களை அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 46 பந்தில் 29 ரன்கள் அடிக்க, இக்கட்டான சூழலில் மிக அபாரமாக பேட்டிங் ஆடி 62 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 42 ரன்கள் அடித்த அஷ்வின் இந்திய அணியை வெற்றி பெற செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
அஷ்வினின் அபாரமான பேட்டிங்கால் தான் இந்திய அணி ஜெயித்தது. அஷ்வின் இன்னிங்ஸை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டிவருகின்றனர். அந்தவகையில், தனக்கே உரிய பாணியில் அஷ்வினை டுவிட்டரில் பாராட்டியுள்ளார் வீரேந்திர சேவாக்.
ICC WTC: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை வலுவாக தக்கவைத்த இந்தியா
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சேவாக், சைண்டிஸ்ட் அஷ்வின் சிறப்பாக போட்டியை முடித்துவைத்தார். அஷ்வின் ஆடியது மிக அபாரமான இன்னிங்ஸ். ஷ்ரேயாஸ் ஐயருடன் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகச்சிறப்பானது என்று சேவாக் பாராட்டியுள்ளார்.