சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலிக்கு சாதனைகளை உடைத்து புதிய சாதனை படைப்பது என்பது தினசரி பணிகளில் ஒன்று போல ஆகிவிட்டது. 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் அதை செய்ய தவறவில்லை. 

ரோஹித்துடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்க்க கோலி உதவினார். ரோஹித் - கோலி ஜோடி 100 ரன்களுக்கு மேல் குவித்தது இது 17வது முறை. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்களுக்கு மேல் குவித்த ஜோடியில் சச்சின் - கங்குலி, தில்ஷான் - சங்கக்கரா ஆகிய ஜோடிகளுக்கு அடுத்த இடத்தில் ரோஹித் - கோலி ஜோடி உள்ளது.

 

ரோஹித்துடன் சேர்ந்து இந்த மைல்கல்லை எட்டிய கோலி, தனிப்பட்ட முறையிலும் ஒரு புதிய சாதனையை படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 338 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இதில் கோலி 66 ரன்கள் அடித்தார். இது இந்த உலக கோப்பையில் கோலி அடிக்கும் ஐந்தாவது அரைசதம். அதுவும் தொடர்ச்சியாக கோலி அடித்த ஐந்தாவது அரைசதம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே கோலி அரைசதம் அடிக்கவில்லை. அதன்பின்னர் நடந்த அனைத்து போட்டிகளிலுமே அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து அரைசதம் அடித்தார் கோலி. 

இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த ஒரே கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், உலக கோப்பையில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை அடித்துள்ளார். அதை கோலி முறியடித்துள்ளார். 

2015 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்தார். ஆனால் ஒரு கேப்டனாக உலக கோப்பையில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த ஒரே வீரர் கோலி தான்.