டி20 உலக கோப்பை: சாதனைகளை குவித்த விராட் கோலி! லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனை பட்டியலில் இணைந்தார்
டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இத்துடன் மேலும் 2 சாதனைகளையும் படைத்தார் கோலி.
டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த விராட் கோலி, இந்த உலக கோப்பையில் 296 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார்.
டி20 உலக கோப்பைக்கு முன் ஆசிய கோப்பை தொடரில் ஃபார்முக்கு வந்த விராட் கோலி, உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடி 53 பந்தில் 82 ரன்களை குவித்து இந்தியாவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அதன்பின்னர் மேலும் 2 அரைசதங்களை அடித்த விராட் கோலி, இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியிலும் அரைசதம் அடித்தார்.
ராகுல் (5), ரோஹித் (27) மற்றும் சூர்யகுமார் (14) ஆகிய மூவரும் ஏமாற்றமளிக்க, பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த விராட் கோலி, 40 பந்தில் 50 ரன்கள் அடித்தார். ஹர்திக் பாண்டியா 33 பந்தில் 63 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது இந்தியா. 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவருமே அடித்து முடித்துவிட்டனர். பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்தில் 86 ரன்களும் அடிக்க, 16வது ஓவரில் இலக்கைஅடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் 40 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 50 ரன்கள் அடித்த விராட் கோலி 2 சாதனைகளை படைத்தார். இந்த அரைசதத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4008 ரன்களை குவித்துள்ளார். 3853 ரன்களுடன் ரோஹித் சர்மா 2ம் இடத்திலும், 3531 ரன்களுடன் மார்டின் கப்டில் 3ம் இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அரைசதம் அடித்ததன்மூலம், டி20 உலக கோப்பை அரையிறுதியில் 3 அரைசதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன் 2014ல் நடந்த டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 72 ரன்களும், 2016ல் நடந்த டி20 உலக கோப்பை அரையிறுதியில் மும்பையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 89 ரன்களையும் குவித்த விராட் கோலி, இந்த டி20 உலக கோப்பை அரையிறுதியில் 3வது அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
ஐபிஎல் 2023: கொச்சியில் ஐபிஎல் ஏலம்..! கூடுதல் தொகையால் குதூகலத்தில் ஐபிஎல் அணிகள்
இந்த போட்டியில் விராட் கோலி அடித்த அரைசதம், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது 200வது அரைசதம். சர்வதேச கிரிக்கெட்டில் 200 அரைசதங்கள் என்ற மைல்கல்லை எட்டிய 5வது வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (264 அரைசதங்கள்), ரிக்கி பாண்டிங் (217), குமார் சங்கக்கரா (216), ஜாக் காலிஸ்(211) ஆகிய நால்வரும் முதல் 4 இடங்களில் உள்ளனர்.