இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடும் உழைப்பாளி. 2008ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான கோலி, தனது பேட்டிங் திறமையை கடும் பயிற்சியின் மூலம் மெருகேற்றி, படிப்படியாக வளர்ந்து இன்று உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். 

அவரது அபாரமான பேட்டிங், அர்ப்பணிப்பு, ஈடுபாடு, ஆர்வம் ஆகியவற்றின் பலனாக தோனிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2014ல் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்ததையடுத்து, 2014ல் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன்பின்னர் 2019 உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதமாக தோனி, 2017ம் ஆண்டில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியிலிருந்து விலக, அந்த அணிகளுக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்றார் விராட் கோலி. 

விராட் கோலியின் கேப்டன்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கோலியின் கேப்டன்சியில் தான் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அணியை முன்னின்று வழிநடத்துகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி கூடவே இருந்ததால், அவரிடமிருந்து பல விஷயங்களை கோலி கற்றுக்கொண்டார். சிறந்த கேப்டனை கூடவே இருந்து பார்த்து பழகியது, ஒரு கேப்டனாக கோலி சிறப்பாக செயல்பட உதவுகிறது. 

இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் தோனி வென்றுகொடுத்தார். அதில் டி20 உலக கோப்பையை தவிர மற்ற இரண்டு ஐசிசி கோப்பைகளையும் வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் கோலி ஆடினார். எனவே உத்தி ரீதியாகவும் கேப்டன்சியிலும் பல விஷயங்களை தோனியிடமிருந்து கோலி கற்றிருப்பார். 

விராட் கோலி சிறந்த கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் கெத்தாக வலம்வரும் இந்த சூழலில், அஷ்வினுடனான உரையாடலில், தான் கேப்டனாவதற்கு தோனி தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அஷ்வினிடம் பேசிய விராட் கோலி, கேப்டனாவது என்பது எனது லட்சியங்களில் கண்டிப்பாக இருந்ததில்லை. ஆனால் தோனி கேப்டன்சியில் ஆடும்போது, அவரிடம் எப்போதும் ஏதாவது ஒரு ஐடியா சொல்லிக்கொண்டே இருப்பேன். நான் சொல்லும் நிறைய விஷயங்களை தோனி ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனாலும் நான் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பேன். அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். நான் கேப்டன் ஆனதில், தோனிக்கு அதிக பங்குண்டு. என்னை நீண்டகாலமாக கவனித்து, கேப்டன் பொறுப்பிற்கு என்னை பரிந்துரைத்தார். 

சும்மா திடீரென போய், தேர்வாளர்களிடம் என்னை கேப்டனாக்குமாறு பரிந்துரைத்திருக்க மாட்டார். எனது செயல்பாடுகளையும், நான் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்ட விதத்தையும் கவனித்து உள்வாங்கிக்கொண்டுதான், என்னை கேப்டனாக்குமாறு சொல்லியிருப்பார். நான் கேப்டான் ஆனதில் தோனிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்று கோலி தெரிவித்தார்.