நான் 40 ரன் அடிச்சப்பவே கண்டிப்பா 150 அடிப்பேன்னு தெரியும்..! ராகுல் டிராவிட்டிடம் மனம் திறந்த விராட் கோலி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட்டில் சதமடித்து 186 ரன்களை குவித்த விராட் கோலி, போட்டிக்கு பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பேசியபோது, 40 ரன்கள் அடித்தபோதே 150 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும் என்று உறுதியாக நம்பியதாக தெரிவித்துள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், 2019ம் ஆண்டு நவம்பருக்கு பின் சுமார் 3 ஆண்டுகளாக சதமே அடிக்காமல் இருந்துவந்தார்.
3 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து மீண்டும் சத கணக்கை தொடங்கிய விராட் கோலி, அதன்பின்னர் ஒருநாள் போட்டியிலும் சதமடித்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் சதமடிக்காமல் இருந்துவந்தார்.
கடைசியாக 2019 நவம்பரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த விராட் கோலில் 1000 நாட்களுக்கு மேலாக சதமடிக்காமல் இருந்துவந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 3 டெஸ்ட்டிலும் நல்ல டச்சில் இருந்தும் கூட அவரால் சதமடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட்டில் சதமடித்து சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலிய அணி 2 நாட்கள் பேட்டிங் ஆடி 480 ரன்களை குவித்த நிலையில், பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே இந்திய அணி தோல்வியை தவிர்க்க முடியும் என்ற கட்டாயத்தில் இருந்த நிலையில், அபாரமாக ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். இது சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் 75வது சதமாகும். 186 ரன்களை குவித்து இந்திய அணி 571 ரன்களை குவிக்க உதவினார்.
அந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் 2-1 என இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடனான உரையாடலில், தான் கண்டிப்பாக 150 ரன்களுக்கு மேல் குவிப்பேன் என்று உறுதியாக நம்பியதாக தெரிவித்தார்.
IND vs AUS: பசங்க பட்டைய கிளப்பிட்டாங்க.. ஆஸி., வீரர்கள் மூவருக்கு ராகுல் டிராவிட் புகழாரம்
“சதமடிப்பதை வாடிக்கையாக கொண்ட உங்களுக்கு கொரோனாவிற்கு பிறகு அதிகமான டெஸ்ட் போட்டிகள் நடக்காததால் சதமடிக்காமல் இருந்துவந்தீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் கிடைக்காதது கஷ்டமாக இருந்திருக்கும். இந்த இன்னிங்ஸை நான் ரசித்து பார்த்தேன். கேப்டவுனில் நீங்கள் அடித்த உங்களது 70வது சதம் அருமையானது. அதன்பின்னர் டெஸ்ட்டில் சதமடிக்காதது உங்கள் மனதை உறுத்திக்கொண்டே இருந்ததா?” என்று ராகுல் டிராவிட் கேட்டார்.
அதற்கு பதிலளித்த விராட் கோலி, “சதம் ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய உத்வேகம். நான் 40-45 ரன்களில் திருப்தியடையும் பேட்ஸ்மேன் இல்லை. இந்த இன்னிங்ஸில் 40 ரன்கள் அடித்ததுமே கண்டிப்பாக 150 ரன்கள் அடிப்பேன் என்று எனக்கு தெரிந்துவிட்டது” என்று ராகுல் டிராவிட்டிடம் விராட் கோலி தெரிவித்தார்.