உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இங்கிலாந்து அல்லது இந்தியா தான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் வலுவாக இருப்பதால், உலக கோப்பை தொடரில் அவர்களது பங்களிப்பு மிக மிக அவசியம். இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரருமான விராட் கோலி, இந்திய அணியில் முக்கிய பங்காற்றுவார். அவரை இந்திய அணி பெரியளவில் சார்ந்திருக்கிறது. 

சர்வதேச போட்டிகளில் ரன்களை குவிக்கும் ரன் மெஷினாக திகழ்கிறார் கோலி. இந்திய அணி வரும் 5ம் தேதி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சவுத்தாம்ப்டனில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோலிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவருக்கு ஃபிசியோ பாட்ரிக் சிகிச்சை அளித்தார். அதன்பின்னர் கோலி மைதானத்திலிருந்து கிளம்பி ஓய்வு எடுக்க சென்றுவிட்டார். 

இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழும் கோலியின் பங்களிப்பு உலக கோப்பையில் அவசியம். கோலி தான் பெரும்பாலும் இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான வித்தியாசமாக இருக்கிறார். எனவே அவர் ஆடுவது அவசியம். கோலியின் காயம் குறித்த அப்டேட்டுகள் வரவில்லை. எனினும் பெரிய காயமாக இருக்க வாய்ப்பில்லை. அதிகமாக பயிற்சி எடுக்காமல் ஓய்வெடுத்துவிட்டு தென்னாப்பிரிக்க போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் நம்பிக்கையாக திகழும் கோலிக்கு காயம் ஏற்பட்ட சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.