இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் செய்யும் வங்கதேச கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டி தொடர்களில் விளையாட உள்ளது. வரும் 3 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. டி20 தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக துணை கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்குத் தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் செயல்படும் அனைத்து இந்திய லஷ்கர் அமைப்பு தேசிய புலனாய்வு முகமைக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது. இதன்மூலம் விராட் கோலி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தீவிரவாதிகள் ஹிட்லிஸ்டில், பிரதமர் மோடி, , அமித்ஷா, , அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, எல்.கே.அத்வானி மற்றும் மோகன் பகவத் ஆகியோரது பெயரும் இடம் பெற்றுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்று தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுக்கப்படுவது ஏற்கனவே நிகழ்ந்திருக்கிறது என்றாலும் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு மிரட்டல் விடுக்கப்படுவது இதுவே முதன்முறை என்கிறது பிசிசிஐ வட்டாரங்கள்.