இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர் முடிவில் 227 ரன்கள் அடித்தது. 228 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அபாரமான சதமடித்து அணியை வெற்றி பெற செய்தார். 

சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்துகள் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. அதனால் பேட்டிங் ஆடுவதற்கு சற்று கடினமாக இருந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. போட்டியின் சூழல், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றை நன்கு அறிந்த ரோஹித் சர்மா, இலக்கு எளிதுதான் என்பதால் அவசரப்படாமல் நிதானமாக நின்று ஆடினார். சதமடித்த ரோஹித் சர்மா, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். 

கடந்த சில போட்டிகளாக சரியாக ஆடாமல், அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த ரோஹித் சர்மாவுக்கு இந்த போட்டி சரியான வாய்ப்பாக அமைந்தது. மீண்டும் ஃபார்முக்கு வந்தார் ரோஹித். ரோஹித் ஃபார்முக்கு திரும்புவது அணிக்கு அவசியமான ஒன்று. சரியான நேரத்தில் ரோஹித் ஃபார்முக்கு வந்துள்ளார்.

போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது ரோஹித் சர்மாவின் இன்னிங்ஸை புகழ்ந்து வெகுவாக புகழ்ந்து பேசினார் கேப்டன் கோலி. ரோஹித் குறித்து பேசிய கேப்டன் கோலி, இதுதான் ரோஹித்தின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என்று கருதுகிறேன். உலக கோப்பையின் முதல் போட்டி என்பதே ஒருவிதமான நெருக்கடியை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் தொடக்கத்தில் பந்துகள் தாறுமாறாக பவுன்ஸ் ஆகும் நிலையில், ஒரு வீரர் அவற்றையெல்லாம் சமாளித்து நிலைத்து ஆடுவது என்பது மிகவும் கடினம்.

பெரும்பாலான சமயங்களில் பேட்ஸ்மேன்கள் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் அடித்து ஆடுவார்கள். ஆனால் ரோஹித் அவசரப்படாமல் பொறுமையாக நிலைத்து நின்று ஆடினார். அனுபவ வீரர்களிடமிருந்து இதுமாதிரியான பொறுப்பான ஆட்டம் தான் ஒரு அணிக்கு தேவை. ரோஹித் ஆடி நிறைய பார்த்திருக்கிறேன். அவர் ஆடியதிலேயே இதுதான் அவரது பெஸ்ட் இன்னிங்ஸ் என்று கேப்டன் கோலி புகழ்ந்தார்.