உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறியது. உலக கோப்பை தோல்வி எதிரொலியாக இந்திய அணியை வலுவாக கட்டமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பது தெரிகிறது. 

கேப்டனை மாற்றுவது குறித்த கருத்துகளும் உலாவருகின்றன. ஒருநாள் அணிக்கு கோலியை தூக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. பிசிசிஐ அதிகாரி ஒருவரே, ரோஹித் கேப்டனாவதற்கு இதுவே சரியான தருணம் என கருத்து தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், உலக கோப்பை முடிந்து நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு செல்கிறது. 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது.

இந்த தொடரில் கேப்டன் கோலி, தோனி, பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் ரோஹித்தின் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. 

விராட் கோலிக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஓய்வளிக்கப்படலாம். ஆனால் டெஸ்ட் தொடரில் ஆடுவார் என்ற தகவல் பரவிவந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் ஆடுவதை விராட் கோலி உறுதி செய்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் தான் ஆடுவதை தேர்வுக்குழுவிடம் விராட் கோலி உறுதி செய்துவிட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. எனவே வெஸ்ட் இண்டீஸ் முழுவதும் கோலி ஆடுவது உறுதியாகிவிட்டது.