சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. பேட்டிங்கில் பெரும்பாலான சாதனைகளை அடித்து காலி செய்துவிட்ட கோலி, மீதமிருக்கும் சாதனைகளையும் அவரது கெரியர் முடிவதற்குள் உடைத்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவந்த நிலையில், உலக கோப்பை தொடரில் விராட் கோலி எதிர்பாக்கப்பட்ட அளவிற்கு சோபிக்கவில்லை. வழக்கமாக அரைசதத்தை எளிதாக சதமாக மாற்றவல்ல கோலி, உலக கோப்பையில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்தும், அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றவில்லை. 

உலக கோப்பைக்கு பின்னர் விராட் கோலியை ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்குவது குறித்த பேச்சுகளும் உலாவந்தன. ஆனால் கோலியை தூக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உலக கோப்பை முடிந்து சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 

இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து 3-0 என இந்திய அணி தொடரை வென்றது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் கோலி சரியாக ஆடவில்லை. ஆனால் மூன்றாவது போட்டியில் 147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 27 ரன்களுக்கே முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் இளம் வீரர் ரிஷப் பண்ட்டுடன் ஜோடி சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 106 ரன்களை சேர்த்தார். இந்த போட்டியில் கோலி 45 பந்துகளில் 59 ரன்களை குவித்தார். 

முதல் இரண்டு போட்டிகளில் ஆடாத கோலி, மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அந்த போட்டியிலும் வென்று தொடரை வென்றது இந்திய அணி. அதன்பின்னர் பேசிய கோலி, எனது பேட்டிங்கை நான் யாருக்கும் நிரூபித்துக்காட்ட வேண்டிய அவசியமில்லை. நான் அணிக்காக எனது பணி என்னவோ அதை செய்துவருகிறேன். நான் சுயநலத்துக்காக ஆடியதே இல்லை. நான் என்ன 20,30,40,50 என என்ன ஸ்கோர் அடிக்கிறே என்பதல்ல விஷயம். அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு. அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் கடந்த 11 ஆண்டுகளாக நான் செய்துவருகிறேன். அதனால் இதெல்லாம் எனக்கு புதிதல்ல. எந்தவிதமான நெருக்கடியும் இல்லை என கோலி அதிரடியாக தெரிவித்தார்.