சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து, நம்பர் 1 வீரராக திகழ்கிறார் விராட் கோலி. 2008ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான விராட் கோலி, 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் ஆடினார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை விராட் கோலி தகர்த்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 சதங்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்கள் என இதுவரை மொத்தம் 69 சதங்களை விளாசியுள்ளார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 100 சர்வதேச சதங்களை விளாசியிருக்கிறார். சச்சினின் இந்த சாதனையை விராட் கோலி முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஃபார்மில் இன்னும் 4-5 ஆண்டுகள் ஆடினால், எதிர்காலத்தில் தகர்ப்பதற்கு அரிய பல மைல்கற்களை செட் செய்துவிடுவார் கோலி. 

இவ்வாறு சாதனைகளை குவித்துவரும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் தனித்துவமான ஒரு சாதனையை முறியடித்துள்ளார். ஒரு நாட்டில் அதிகமான இடங்களில் அதிகமான டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துவிட்டார். 

இந்தியாவில் 10 வெவ்வேறு இடங்களில் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துள்ளார். அவர்தான் ஒரு நாட்டில் அதிகமான இடங்களில் சதமடித்த வீரராக திகழ்ந்தார். விராட் கோலி இந்தியாவில் 11 வெவ்வேறு இடங்களில் டெஸ்ட் போட்டியில் சதமடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.