இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் நடப்பு வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இதையடுத்து ஏற்கனவே பிசிசிஐ, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பெற்றது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்ததாக தகவல் வெளிவந்தது. அதிலிருந்து 6 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர். டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங், ஃபில் சிம்மன்ஸ், லால்சந்த் ராஜ்பூத் மற்றும் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இவர்கள் 6 பேருக்கும் இன்று நேர்காணல் நடத்தப்படுகிறது. 

கபில் தேவ் தலைமையிலான கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு, இந்த 6 பேரையும் நேர்காணல் செய்கிறது. நேர்காணல் எல்லாம் கண் துடைப்புதான். ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக தொடர்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளதாக தெரிகிறது. தலைமை பயிற்சியாளரை மட்டும்தான் கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வு செய்யும். மற்ற பயிற்சியாளர்களை பிசிசிஐ தேர்வு செய்யும்.

இந்திய அணியின் பவுலிங் யூனிட் கடந்த 2 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்து எதிரணிகளின் பேட்டிங் ஆர்டரின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. பவுலிங் யூனிட் 2 ஆண்டுகளில் அதீத வளர்ச்சியடைந்திருப்பதால் பவுலிங் கோச் பரத் அருண் மாற்றப்படுவதற்கான வாய்ப்பில்லை. அவரே பவுலிங் பயிற்சியாளராக தொடர்வார் என்று தெரிகிறது. 

ஆனால் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கண்டிப்பாக மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விக்ரம் ரத்தோர், பிரவீன் ஆம்ரே, லால்சந்த் ராஜ்பூட், ஜோனாதன் ட்ராட், திலன் சமரவீரா ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் விக்ரம் ரத்தோர் பேட்டிங் பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.