உலக கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விஜய் சங்கர் விலகியுள்ளார்.

உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. முதல் 6 போட்டிகளில் தோல்வியையே தழுவாத இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதல் தோல்வியை தழுவியது. 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கையில் காயமடைந்த தவான், உலக கோப்பை தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து நான்காவது வரிசையில் களமிறங்கி கொண்டிருந்த ராகுல், தொடக்க வீரராக களமிறக்கப்பட்டதால் விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்கும் வாய்ப்பை பெற்றார். 

ஆனால் அவர் அந்த வரிசைக்கு நியாயம் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்த விஜய் சங்கர், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக பெரிய இன்னிங்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்தும் கூட அதை தவறவிட்டார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 29 ரன்களும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 14 ரன்களும் மட்டுமே எடுத்தார். 

அதனால் விஜய் சங்கரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்த நிலையில், விஜய் சங்கர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிய கேப்டன் கோலி, அவருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் காலில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவரை நீக்குவதாக கூறி ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். 

விஜய் சங்கருக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு முன்பு பயிற்சியின் போது பும்ராவின் பந்தில் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அது சிறிய அளவிலான காயம் தான். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஆடினார். காயம் ஏற்பட்டதற்கு பின்னர் அது சரியான காரணத்தால்தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆடினார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் காயத்தை காரணம் காட்டி ஓரங்கட்டப்பட்டார். 

அவருக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் ஆடினார். இந்நிலையில் விஜய் சங்கர் காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்தே வெளியேறியதாக பிடிஐ, ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை. விஜய் சங்கர் விலகினால் அவருக்கு பதிலாக யார் அணியில் இணைவார் என்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.