ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. நாக்பூர் மைதானத்திற்கு இந்த ஸ்கோர் குறைவுதான். எனினும் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தினர். 

குல்தீப், கேதர், ஜடேஜா ஆகிய மூவரும் மிடில் ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசினர். பும்ராவும் ஷமியும் டெத் ஓவர்களை சிறப்பாக வீசினர். விஜய் சங்கர் 10வது ஓவரில் 13 ரன்கள் கொடுத்தார். அதன்பிறகு அவருக்கு பவுலிங்கே வழங்கப்படவில்லை. பும்ரா மற்றும் ஷமியின் ஓவர்கள் 49 ஓவர்களில் முடிந்துவிட கடைசி ஓவரை விஜய் சங்கர் வீசியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மிகவும் நெருக்கடியான சூழலில் கடைசி ஓவரை வீசிய விஜய் சங்கர், கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இதுவரை பேட்டிங்கில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுவந்த விஜய் சங்கர், நேற்றைய போட்டியில் தன்னால் இக்கட்டான சூழலில் பவுலிங்கும் சிறப்பாக வீசமுடியும் என்று நிரூபித்தார். 

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டபோது ராயுடுவுடன் சேர்ந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய விஜய் சங்கர், நேற்றைய போட்டியில் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினார். எனினும் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் சிறப்பாக பவுலிங் போட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

இந்த போட்டியின் 10வது ஓவரில் 13 ரன்களை வாரி வழங்கினார். அதனால் அவருக்கு அதன்பிறகு பவுலிங்கே கொடுக்காமல் நேரடியாக கடைசி ஓவரை வீசினார். அதனால் அவர் எப்படி வீசுவார் என்ற சந்தேகம் பொதுவெளியில் இருந்திருக்கும். அந்த சந்தேகத்திற்கு தனது நேர்த்தியான பவுலிங்கின் மூலம் பதில் சொன்னார் விஜய் சங்கர்.

போட்டிக்கு பிறகு வர்ணனையாளர்கள் கவாஸ்கர் மற்றும் ஹைடனுடனான உரையாடலின் போது பேசிய விஜய் சங்கர், கடைசி ஓவரை நான் தான் வீசப்போகிறேன் என்பது தெரியும். 48வது ஓவரை வீசிய பிறகு என்னிடம் வந்த பும்ரா, பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதாகவும் சரியான லெந்த்தில் ஸ்டம்பை நோக்கி பந்தை வீச வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். அதன்பின்னர் தெளிவடைந்தேன். வெற்றி பெற வேண்டுமென்றால் ஸ்டம்புக்கு நேராக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படி வீசி விக்கெட்டை வீழ்த்தினேன். கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் நான் என்னை பெரிய ஆள் என்றெல்லாம் நினைக்கவில்லை என்று தன்னடக்கத்துடன் பேசினார்.