இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில், தோனியுடனான தங்கள் அனுபவங்களையும், தோனியை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.

அந்தவகையில், ஒருநாள் கிரிக்கெட்டில் தோனி அதிபட்ச ஸ்கோரை(183*) அடித்த இன்னிங்ஸில் நடந்த சம்பவத்தை பற்றி, அப்போது தோனியுடன் இணைந்து ஆடிய வேணுகோபால் ராவ் பகிர்ந்துள்ளார்.

2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, முதல் சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை. அதன்பின்னர் 2005ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த தோனி, அதே ஆண்டில் இலங்கைக்கு எதிராக 183 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று 303 ரன்கள் என்ற இலக்கை விரட்டி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். தோனியின் கிரிக்கெட் கெரியரில் அந்த இன்னிங்ஸ் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. 

இப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு அதிகமான இலக்கை விரட்டுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன், 300 ரன்களுக்கு அதிகமான இலக்கு என்பது மிகக்கடினமான இலக்கு. அதை விரட்டுவதும் அவ்வளவு எளிதான காரியமல்ல. அப்படியான சூழலில், அணியின் சீனியர் வீரர்களான சச்சின், சேவாக், ராகுல் டிராவிட் ஆகியோர் சரியாக ஆடாத போதிலும், தனி ஒருவனாக போராடி 183 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அதுவும் தோனியின் அதிரடி சதத்தால் 47வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்டியது இந்திய அணி.

அந்த போட்டியில் தோனி போட்டியை முடித்துவைத்த சம்பவம் குறித்து பேசிய வேணுகோபால் ராவ், இலங்கைக்கு எதிராக தோனி ஆடிய இன்னிங்ஸ் அபாரமானது. சமிந்த வாஸ் வீசிய பந்தை கவர் திசையில் சிக்ஸர் அடித்தார் தோனி.  6ம் வரிசையில் நான் களத்திற்கு செல்லும்போது, என்னால் போட்டியை முடித்துவைக்கமுடியும் என எனக்கு தெரியும். ஆனால் தோனி, எனக்கு ஒரு சான்ஸ் கொடு.. நானே முடித்துவைக்கிறேன் என்று என்னிடம் கூறினார். 

எனவே தோனியே வின்னிங் ஷாட்டை ஆடட்டும் என்று, நான் ஃபெர்னாண்டோ ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்துகளைக்கூட அடிக்காமல் விட்டேன். அதைக்கண்ட சேவாக்(அந்த சமயத்தில் தோனி பை ரன்னராக நின்றார்), தொடர்ச்சியாக என்னிடம் வந்து, வேகமாக அடித்து முடிப்பா என்றார். ஆனால் தோனி என்னிடம் வந்து அடிக்காதே; நானே முடிக்கிறேன் என்றார். அதனால் நானும் அடிக்காமல் விட்டேன். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி தோனி தனது ஸ்டைலில் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார்.