Asianet News TamilAsianet News Tamil

சேவாக், உத்தப்பாவை வீசவைத்தது யாருடைய திட்டம்..? தோனியை ஒப்புக்கொள்ள வைத்தது எப்படி..? சுவாரஸ்ய தகவல்

2007 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போல்டு அவுட் முறையில் சேவாக், உத்தப்பா ஆகிய பேட்ஸ்மேன்களை பந்துவீச வைத்தது குறித்து, அப்போதைய இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசியுள்ளார். 
 

venkatesh prasad shares why he picks sehwag and uthappa for bowled out against pakistan
Author
Chennai, First Published Jul 16, 2020, 4:39 PM IST

தோனி கேப்டனான புதிதில் 2007ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் 2 முறை மோதின. லீக் சுற்றிலும் இறுதி போட்டியிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இரண்டிலுமே இந்தியா தான் வெற்றி.

லீக் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி டர்பனில் நடந்தது. அந்த போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு சம்பவம் நடந்தது. அந்த போட்டி டை ஆனதையடுத்து, இப்போது வீசப்படுவதை போல சூப்பர் ஓவர் வீசப்படாமல் வித்தியாசமான முறை கையாளப்பட்டது.

ஒவ்வொரு அணியிலிருந்தும் 5 வீரர்கள் பவுலிங் போட அழைக்கப்பட்டனர். அதில் எந்த அணியின் வீரர்கள் அதிகமாக ஸ்டம்பில் அடித்து போல்டு செய்கிறார்களோ அந்த அணி வெற்றி பெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கு இரு அணி கேப்டன்களும் ஒப்புதல் தெரிவித்தனர். 

பாகிஸ்தான் அணி, அவர்களது பிரைம் பவுலர்களை தேர்வு செய்து வீசவைத்தது. பாகிஸ்தான் சார்பில் முதல் மூன்று பந்துகளை வீசிய யாசிர் அராஃபத், உமர் குல் மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகிய மூவருமே ஸ்டம்பை தாக்க தவறிவிட்டனர். ஆனால் இந்திய அணி சார்பில் வீசிய மூவருமே ஸ்டம்பில் அடித்தனர். இந்திய அணி சார்பில் பந்துவீசிய மூவரில் இருவர் பேட்ஸ்மேன்கள்; பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள். ஹர்பஜன் சிங் மட்டுமே பிரைம் ஸ்பின்னர். ஆனால் மூவருமே கிளீன் போல்டு செய்து அசத்தினர். இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு பந்தை கூட ஸ்டம்பில் போடமுடியாமல் அசிங்கப்பட்டது பாகிஸ்தான்.

இந்த போல்டு அவுட் முறையில், பிரைம் பவுலர்களை இறக்காமல், சேவாக், உத்தப்பாவை இறக்கியது, அப்போதைய இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த வெங்கடேஷ் பிரசாத்தின் ஐடியா. வெங்கடேஷ் பிரசாத் தான், தோனியிடம் சேவாக் மற்றும்  உத்தப்பாவை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். 

அதுகுறித்து அவரே, அஷ்வினுடனான உரையாடலில் பேசியுள்ளார். அந்த சம்பவம் குறித்து பேசிய வெங்கடேஷ் பிரசாத், அப்போது சூப்பர் ஓவர் அறிமுகம் இல்லை. எனவே போட்டி டை-யானால் போல்டு அவுட் முறை. எதார்த்தமாகவே இந்திய வீரர்கள் ஸ்டம்ப்பை போல்டு செய்து தொடர்ச்சியாக பயிற்சி எடுத்தார்கள்.

பேட்ஸ்மேன்களுக்கும் பவுலர்களுக்கும் இடையே போல்டு அவுட்டில் போட்டி நடக்கும். அதில், சேவாக், தோனி, உத்தப்பா ஆகியோர் ஆர்வமாக பந்துவீசுவார்கள். அதில் நான் பார்த்தவரையில் சேவாக்கும், உத்தப்பாவும் தான் அடிக்கடி தொடர்ச்சியாக ஸ்டம்ப்பில் அடிக்கக்கூடியவர்கள். ஹர்பஜன் சிங் பிரைம் பவுலர். அவரும் ஸ்டம்ப்பில் துல்லியமாக அடிப்பார். 

இந்திய வீரர்கள் போல்டு அவுட் செய்வதில் கைதேர்ந்தவர்கள். முதல் போட்டியே நமக்கு டை ஆனது. மிகவும் கடினமான போட்டியாக அது அமைந்தது. போல்டு அவுட் முறையில் போட்டி முடிவு தீர்மானிக்கப்படுவது என்று முடிவெடுக்கப்பட்ட பின், இவர்களையெல்லாம் வீசவைக்கலாம் என்று தோனியிடம் சொன்னேன். தோனி மறுப்பெல்லாம் தெரிவிக்கவில்லை. சேவாக், உத்தப்பா ஆகிய இருவருமே சிறப்பாக வீசுவார்கள் என உள்ளுணர்வு சொன்னது என்று வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios