ரஜினிகாந்தின் பிறந்தநாளான நேற்று (டிசம்பர் 12) விஜய் ஹசாரே தொடரில் அடித்த சதத்தை வெங்கடேஷ் ஐயர், ரஜினிகாந்துக்கே அர்ப்பணித்தார்.
ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாதியில் கேகேஆர் அணிக்காக ஆட வாய்ப்பு பெற்ற வெங்கடேஷ் ஐயர், அந்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி டாப் ஆர்டரில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பவுலிங்கிலும் ஒருசில பயனுள்ள ஓவர்களை வீசினார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக, இந்திய அணியின் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வருவார் என்று மதிப்பிடப்படுகிறார்.
ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து ஓரளவிற்கு பங்களிப்பு செய்தார். ஹர்திக் பாண்டியா ஃபிட்னெஸ் பிரச்னையால் ஆடாதவேளையில், அவரது இடத்தை பிடிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செவ்வனே செய்துவருகிறார் வெங்கடேஷ் ஐயர். டி20 அணியில் இடம்பிடித்துவிட்ட வெங்கடேஷ் ஐயர், அடுத்ததாக ஒருநாள் அணி கதவை தட்டுகிறார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்து வளர்ந்தார். பிறந்து வளர்ந்தது மத்திய பிரதேசம் என்றாலும், அடிப்படையில் தமிழரான வெங்கடேஷ் ஐயர், அருமையாக தமிழ் பேசக்கூடியவர். ரஜினிகாந்தின் பரம ரசிகன்.
விஜய் ஹசாரே தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி 113 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 151 ரன்களை குவித்த வெங்கடேஷ் ஐயர், பவுலிங்கிலும் 2 விக்கெட் வீழ்த்தி மத்திய பிரதேச அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த போட்டியில் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று(டிசம்பர்12) சதமடித்த வெங்கடேஷ் ஐயர், அந்த சதத்தை ரஜினிகாந்துக்கு அர்ப்பணித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
