தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய இளம் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் 163.7 கிமீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனில் அடையாளம் காணப்பட்ட அரிதினும் அரிதான திறமை உம்ரான் மாலிக். காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக், இர்ஃபான் பதானால் அடையாளம் காணப்பட்டு வளர்த்துவிடப்பட்ட வீரர். 

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய உம்ரான் மாலிக் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பவலுக்கு 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் சீசனின் அதிவேக பந்தாக இருந்தது. ஃபைனலில் லாக்கி ஃபெர்குசன் 157.3 கிமீ வேகத்தில் பந்துவீசி உம்ரானை முந்தினார்.

150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அல்லு தெறிக்கவிட்டார் உம்ரான் மாலிக். அதிவேகமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த உம்ரான் மாலிக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடத்தையும் பிடித்தார்.

இந்திய அணியில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரது கருத்தாகவும் இருக்கிறது. இந்நிலையில், பயிற்சியில் அவர் அதிவேக பந்தை வீசி சாதனை படைத்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 163.7 கிமீ வேகத்தில் ஒரு பந்தை வீசியிருக்கிறார் உம்ரான் மாலிக். பந்தின் வேகத்தை கணக்கிடும் மெஷினில் அது பதிவானது. அதைக்கண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட அனைவரும் வியப்படைந்தனர்.

இதுதான் கிரிக்கெட்டில் வீசப்பட்ட அதிவேக பந்து. ஆனால் இதை அவர் களத்தில் வீசியிருந்தால் பெரிய சாதனையாக இருந்திருக்கும். 2003 உலக கோப்பையில் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை வீசப்பட்ட அதிவேக பந்து என்ற சாதனையை பெற்றிருக்கிறது. அதைவிட வேகமாக வீசி மிரட்டியிருக்கிறார் உம்ரான் மாலிக். அதை போட்டியின் போது வீசாமல் பயிற்சியில் வீசியதால் சர்வதேச கிரிக்கெட் சாதனையில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஆனால் விரைவில் களத்தில் அதைவிட வேகமான பந்தைவீசி உம்ரான் மாலிக் சாதனை படைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.