ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் பகலிரவு போட்டியாக நடந்துவருகிறது. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மார்னஸ் லபுஷேனின் அபாரமான சதம் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் அரைசதம், மற்ற வீரர்களின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தை சமாளிக்க முடியாமல் வெறும் 166 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

250 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 250 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் மொத்தமாக 417 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருப்பதால், வெற்றியை நெருங்கிவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் கடைசி இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய மெகா இலக்கை, ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோரை மீறி நியூசிலாந்து அணி அடிக்க வாய்ப்பேயில்லை. 

இந்நிலையில், இந்த போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. கிரிக்கெட் களத்தில் எத்தனையோ வீரர்கள் அபாரமான மற்றும் அசாத்தியமான கேட்ச்களை பிடித்து பார்த்திருப்போம். இந்த போட்டியில் அம்பயர் அருமையான கேட்ச் ஒன்றை பிடித்தார். பேட்ஸ்மேனுக்கு அருகே நின்று ஃபீல்டிங் செய்ய சென்ற ஸ்மித், தனது தொப்பியை கழட்டிவிட்டு ஹெல்மெட்டை மாட்டினார். எனவே தொப்பியை அம்பயரிடம் கொடுத்தார். அம்பயர் அருகில் சென்று கொடுக்காமல், தூக்கி போட்டார். ஸ்மித் காற்றில் வீசிய அந்த ரவுண்டு தொப்பியை அம்பயர் அலீம் தார் அருமையாக லாவகமாக அதை கேட்ச் செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.