ஆஸ்திரேலியாவில் கழுத்தில் பந்து தாக்கி 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஃபில் ஹியூக்ஸ் பந்து தாக்கி இறந்ததை நினைவுப்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கிரிக்கெட் விளையாடியபோது கழுத்தில் பந்து தாக்கி 17 வயதான இளம் வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது மெல்போர்ன் கிழக்குப் பகுதியில் 17 வயது வீரர் பென் ஆஸ்டின் ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடி வந்தார். நேற்று முன்தினம் போட்டிக்கு முன்பாக அவர் ஃபெர்ன்ட்ரீ கல்லியில் உள்ள வாலி டீவ் ரிசர்வ் மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

பந்து தாக்கி இளம் வீரர் மரணம்

தானியங்கி இயந்திரம் எறிந்த பந்தை அடித்து அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது ஒரு பந்து வேகமாக வந்து கழுத்தில் தாக்கியதில் பென் ஆஸ்டின் வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார். உடனடியாக அங்கு துணை மருத்துவ உதவியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆஸ்டின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹெல்மெட் இருந்தபோதும் பறிபோன உயிர்

பென் ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்து விளையாடியபோதும் பந்து தாக்கி அவரது உயிரை பறித்துள்ளது. பென் ஆஸ்டின் மறைவால் நாங்கள் மிகவும் மனமுடைந்துள்ளோம். மேலும் அவரது மரணத்தின் தாக்கம் எங்கள் கிரிக்கெட் சமூகம் அனைவராலும் உணரப்படும்'' என்று ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஃபில் ஹியூக்ஸ் மரணத்தை மறக்க முடியுமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஃபில் ஹியூக்ஸ் கடந்த 2014-ம் ஆண்டு ஷெஃபீல்ட் ஷீல்ட் முதல் தரப் போட்டியில் சீன் அப்போட் வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டின் கீழ்ப்பகுதியில் கழுத்தின் பின்புறத்தில் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் உலக கிரிக்கெட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது பென் ஆஸ்டின் மரணமும் இதே போல் நிகழ்ந்துள்ளது.

கிரிக்கெட் கிளப்புகள் இரங்கல்

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் மைக் பெயர்ட், இந்தச் சம்பவத்திலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கவனிக்கும் என்று கூறினார். மெல்போர்ன் முழுவதும் உள்ள கிரிக்கெட் கிளப்புகள், வாலி டீவ் ரிசர்வ் மைதானத்தில் பென் ஆஸ்டினுக்காக அஞ்சலி செலுத்தின.