உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும் ஐபிஎல் தான் மிகவும் பிரபலமான மற்றும் அதிகமான பணம் புழங்கும் ஒரே லீக். எனவே அனைத்து நாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிவிட்டால், தங்களுக்கான அங்கீகாரத்தை விரைவில் பெற்றுகொள்ள முடியும் என்பதாலும் உலகளவில் பிரபலமடைவதுடன் அதிகமாக சம்பாதிக்கவும் முடியும் என்பதாலும் வீரர்கள் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்நிலையில், ஐபிஎல் 13வது சீசனுக்கான(2020) ஏலத்தில் கேகேஆர் அணி, இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான டாம் பாண்ட்டனை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில், அவர் ஐபிஎல்லில் ஆடாமல் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் அறிவுறுத்தியிருந்தார். அவருக்கு பாண்ட்டன் பதிலடி கொடுத்துள்ளார். 

இங்கிலாந்து பத்திரிகையான டெலிகிராஃபிற்கு எழுதிய கட்டுரையில், டாம் பாண்ட்டன் பற்றி எழுதியிருந்தார் மைக்கேல் வான். அதில், “டாம் பாண்ட்டனின் பேட்டிங்கை பற்றி தெரிந்துகொள்வதற்காக, அவரது பேட்டிங்கை போதுமான அளவிற்கு பார்த்து ஆராய்ந்தேன். அவர் சூப்பர் ஸ்டார். ஐபிஎல்லில் எப்போது வேண்டுமானாலும் ஆடலாம். அதற்கு இப்ப ஒன்றும் அவசரமில்லை. ஆனால் அதிகமான முதல் தர கிரிக்கெட்டில்(நான்கு நாள் டெஸ்ட்) முடிந்தளவிற்கு விரைவில் நிறைய சதங்களை அவர் விளாச வேண்டும். ஐபிஎல்லில் அப்புறம் ஆடிக்கொள்ளலாம் என்று மைக்கேல் வான் கருத்து கூறியிருந்தார். 

Also Read - நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 2 இந்திய வீரர்கள் அறிமுகம்.. உத்தேச இந்திய அணி

ஆனால் ஐபிஎல்லில் ஆடியே தீருவேன் என்று டாம் பாண்ட்டன், வானுக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டாம் பாண்ட்டன், கண்டிப்பாக ஐபிஎல்லில் ஆடுவேன். நான் வளரும் பருவத்தில் ஐபிஎல்லில் கண்டிப்பாக ஆட வேண்டும் என்ற கனவு இருந்தது. ஐபிஎல்லில் ஆட நான் விரும்புகிறேன். டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற விரும்புகிறேன். எனவே ஐபிஎல்லில் நன்றாக ஆடினால், எனக்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐபிஎல்லில் நான் சிறப்பாக ஆடுவது, டி20 உலக கோப்பை அணியில் எனக்கான இடத்தை பிடிக்க உதவிகரமாக இருக்கும் என டாம் பாண்ட்டன் தெரிவித்துள்ளார்.