டிஎன்பில் கிரிக்கெட்டில் லைகா கோவை கிங்ஸ் அணியை திருப்பூர் தமிழன்ஸ் அணி வீழ்த்தியது. கோவை அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
TNPL 2025: Tiruppur Tamilans Beat Lyca Covai Kings: டிஎன்பில் கிரிக்கெட்டில் லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஜிதேந்திர குமார் 6 ரன்னில் அவுட் ஆனார். சுரேஷ் லோகேஷ்வர் (21), பாலசுப்பிரமணியம் சச்சின் (24) நன்றாக விளையாடினார்கள்.
137 ரன்னில் முடங்கிய கோவை
ஆனால் குரு ராகவேந்திரன் (11), கேப்டன் ஷாருக்கான் (19), விஷால் வைத்யா (13) பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணியால் பெரிய ரன்களை எடுக்க முடியவில்லை. இறுதியில் ஆண்ட்ரே சித்தார்த் 21 ரன் அடித்தார். திருப்பூர் தமிழன்ஸ் அணியில் இசக்கிமுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடராஜன், சாய் கிஷோர், தலா 2 விக்கெட்டுகளையும், ரகுபதி சிலம்பரன் 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.
திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி
பின்பு திருப்பூர் தமிழன்ஸ் அணிஎளிய இலக்கை துரத்திய நிலையில், தொடக்க வீரர் துஷார் ரஹேஜா (13 ரன்) விரைவில் அவுட் ஆனார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் அமித் சாத்விக் அதிரடியில் பட்டய கிளப்பி சிக்சர்களாக விளாசினார். மறுபக்கம் கேப்டன் சாய் கிஷோர் (24), பிரதோஷ் ரஞ்சன் பால் (21) ஆகியொர் கணிசமான பங்களிப்பு செய்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி வெறும் 16.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அமித் சாத்விக்கின் அதிரடி ஆட்டம்
இறுதி வரை களத்தில் இருந்த அமித் சாத்விக் 47 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 66 ரன்கள் அடித்து மேட்ச் வின்னராக ஜொலித்தார். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இசக்கி முத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி மொத்தம் 8 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளது. அதே வேளையில் 6வது ஆட்டத்தில் விளையாடும் கோவை அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்து 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
