டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் 21வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. சிக்சர் மழை பொழிந்த அந்த அணியின் கேப்டன் பாபா அபாராஜித் 7 சிக்சர்கள், 1 பவுண்டரியுடன் 63 ரன்கள் விளாசினார். விஜய் சங்கர் 46 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 59 ரன்கள் அடித்தார்.

அதிரடியாக ஆடிய கேப்டன் சுரேஷ் குமார்

திருச்சி அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், கணேஷ் மூர்த்தி, சரவண குமார், ஈஸ்வரன், ராஜ்குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். பின்பு சவாலான இலக்கை நோக்கி திருச்சி அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் வசீம் அகமது 10 ரன்னில் அவுட் ஆனார். பின்பு அதிரடியாக ஆடிய கேப்டன் சுரேஷ் குமார் 40 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஜெகதீசன் கௌசிக் 33 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 45 ரன்கள் அடித்தார்.

திருச்சி அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி

ஆனால் பின்பு வந்த ஜாபர் ஜமால் 6 ரன்னில் அவுட் ஆனார். ராஜ்குமார் (6 ரன்) விரைவில் வெளியேறினார். கடைசி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ரோஹித் சுதர் பந்து வீசினார். கடைசி ஒவரை அபாரமாக வீசிய அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சய் யாதவ்வை (19 பந்தில் 29 ரன்) அவுட்டாகி வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 174 ரன்கல் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6வது வெற்றி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் பிரேம் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விஜய் சங்கர், சிலம்பரசன், ரோஹித் சுதர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரை சதம் மற்றும் 1 விக்கெட் வீழ்த்திய விஜய் சங்கர் ஆட்டநாயகன் விருது வென்றார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி அனைத்திலும் வெற்றி பெற்று ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. அதே வேளையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள திருச்சிக்கு இது 4வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.