டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திருப்பூர் தமிழன்ஸ் அணி மதுரை பாந்தர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
TNPL 2025: Tiruppur Tamilans Defeat Madurai Panthers: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று நடந்த 2வது போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி திருப்பூர் பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மதுரை அணி தடுமாற்றம்
அந்த அணியின் ராம் அரவிந்த் (1 ரன்), பால்சந்தர் அனிருத் (0) தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் சதுர்வேத் (10), கணேஷ் (10) ஆகியோரும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த அணியின் ஒரு வீரர் கூட நிலைத்து நின்று விளையாடவில்லை. அதீக் உர் ரஹ்மான் (0), முருகன் அஸ்வின் (13) என அனைத்து வீரர்களும் களத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தனர்.
120 ரன்களுக்கு ஆல் அவுட்
சரத்குமார் (31), இறுதிக்கட்டத்தில் ராஜலிங்கம் 9 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்கள் விளாசியதால் மட்டுமே அந்த அணி 100 ரன்களை கடக்க முடிந்தது. மதுரை அணி 20 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. திருப்பூர் தரப்பில் ரகுபதி சிலம்பரசன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். நடராஜன், மோகன் பிரசாத், இசக்கிமுத்து தலா 1 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதிரடியில் மாஸ் காட்டிய திருப்பூர்
பின்பு எளிய இலக்கை நோக்கி விளையாடிய திருப்பூர் அணி அதிரடியில் வெளுத்துக் கட்டியது. அதிரடியில் மிரட்டிய துஷார் ரஹேஜா 19 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்கள் விளாசி அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் அமித் சாத்விக் வெறும் 36 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 71 ரன்கள் நொறுக்கி நாட் அவுட் ஆக திகழ்ந்தார். திருப்பூர் அணி வெறும் 10 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 124 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 4 ஓவரில் 11 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருது வென்றார்.
திருப்பூருக்கு 3வது வெற்றி
இது 5வது ஆட்டத்தில் விளையாடிய திருப்பூருக்கு 3வது வெற்றியாகும். இதேபோல் 5வது ஆட்டத்தில் விளையாடிய மதுரைக்கு 3வது தோல்வியாகும். ஏற்கெனவே இன்று நடந்த முதல் ஆட்டத்தில் SKM சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
