நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் ரோஸ் டெய்லரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. டெய்லர் மட்டுமே 86 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 267 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. 18 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி வீரர்கள், இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பினர். நியூசிலாந்து அணி 124 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. வாட்லிங்கும் டிம் சௌதியும் இணைந்து ஆடிவருகின்றனர். 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து வீரர் டிம் சௌதி, ஒரு சிக்ஸர் உட்பட 14 ரன்கள் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டிம் சௌதி அடித்த 69வது சிக்ஸர் அது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் ரெக்கார்டை சமன் செய்துள்ளார் சௌதி. சச்சின் தனது டெஸ்ட் கெரியரில் 329 இன்னிங்ஸ்களில் வெறும் 69 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். சௌதி 97 இன்னிங்ஸ்களிலேயே 69 சிக்ஸர்களை அடித்துவிட்டார். 

இந்த பட்டியலில் 107 சிக்ஸர்களுடன் மெக்கல்லம் முதலிடத்திலும் 100 சிக்ஸர்களுடன் கில்கிறிஸ்ட் இரண்டாவது இடத்திலும் 98 சிக்ஸர்களுடன் கெய்ல் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.