ராஜ்கோட்டில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 153 ரன்கள் அடித்தது. 154 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 85 ரன்களை குவித்து இந்திய அணி எளிதாக வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார். ரோஹித் அமைத்து கொடுத்த அபாரமான தொடக்கத்தால் இந்திய அணி 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் லிட்டன் தாஸை 6வது ஓவரில் ஸ்டம்பிங் செய்தார் ரிஷப் பண்ட். ஆனால் சாஹல் வீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்தை, ஸ்டம்புக்கு முன்னாலேயே பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்ததால் அதற்கு அவுட் கொடுக்கப்படவில்லை. அதன்பின்னர் அதே சாஹல் வீசிய 13வது ஓவரின் கடைசி பந்தில் சௌமியா சர்க்காரை ஸ்டம்பிங் செய்தார் ரிஷப் பண்ட்.

ஆனால் ரிஷப் பண்ட், 6வது ஓவரில் செய்த தவறால், இந்த ஸ்டம்பிங்கும் பரிசோதிக்கப்பட்டது. இந்த முறை அந்த தவறை செய்யவில்லை ரிஷப். பந்து ஸ்டம்பை கடந்து வந்த பின்னர் தான் அதை பிடித்து ஸ்டம்பிங் செய்தார். எனவே அது அவுட்டுதான். ஆனால் தேர்டு அம்பயர் அவுட் பட்டனை அழுத்துவதற்கு பதிலாக தவறுதலாக நாட் அவுட் பட்டனை அழுத்திவிட்டதால், ஸ்கீரினில் நாட் அவுட் என வந்தது. அதனால் கடும் அதிருப்தியடைந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, கள நடுவரிடம் வாதிட ஆரம்பித்த நிலையில், உடனடியாக பட்டனை மாற்றி அழுத்தினார் தேர்டு அம்பயர். அதன்பின்னர் தேர்டு அம்பயர் செய்த அபத்தத்தை நினைத்து சிரித்தார் ரோஹித். அந்த காட்சி இதோ.. 

தவறுகளை முடிந்தவரை களையவேண்டும் என்பதற்காகத்தான் தேர்டு அம்பயர்களே. ஆனால் அவர்களே இப்படி செய்தால் என்னதான் செய்வது? வரவர அம்பயர்களின் தரம் படுமோசமாகிக்கொண்டே செல்கிறது.