டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று காலை டெல்லி வந்த நிலையில் தற்போது டிராபியோடு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற இந்திய அணி வீரர்கள் 4 நாட்களுக்கு பிறகு இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். அவர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உற்சாக வரவேற்பு அளித்தார். அதன் பிறகு உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னர் ஆகியோர் இணைந்து கேட் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் டெல்லி விமான நிலையத்திலிருந்து பேருந்தில் ஹோட்டலுக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோட்டலுக்கு வந்த ரோகித் சர்மா நடன கலைஞர்கள் உடன் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் இந்திய வீரர்கள் சாம்பியன்ஸ் ஜெர்சி அணிந்து கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடியின் இல்லத்திற்கு வந்த இந்திய அணி வீரர்கள் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி 3ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிரதமர் மோடிக்கு இந்திய அணி வீரர்கள் முதல் பரிசாக முத்தான பரிசாக டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று அவரது கையில் கொடுத்துள்ளனர். பின்னர் இந்திய அணி வீரர்களுக்கு சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்களுக்கு அவர்களது டிரெஸிங் ரூமிற்கு சென்ற பிரதமர் மோடி ஆறுதல் கூறியிருந்தார். மேலும், ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா என்று ஒவ்வொருவருக்கும் ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து மும்பை செல்லும் இந்திய அணி வீரர்கள் அங்கு மாலை 5 மணிக்கு மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் டி20 உலகக் கோப்பை டிராபியோடு ஊர்வலமாக செல்கின்றனர். வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

