உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தி ஆடிவரும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. இந்திய அணி ஆடிய முதல் 6 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக மழையால் கைவிடப்பட்ட போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தான் வென்றது. 7வது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, அந்த போட்டியில் முதல் தோல்வியை அடைந்தது. 

இந்நிலையில், இன்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. வங்கதேச அணிக்கு இது முக்கியமான போட்டி. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க அந்த அணி கண்டிப்பாக இந்திய அணியை வீழ்த்தியாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், சௌமியா சர்க்கார், தமீம் இக்பால் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணிக்கு கண்டிப்பாக வங்கதேசம் சவால் அளிக்கும். 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. விஜய் சங்கர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியதால், அவருக்கு பதிலாக அணியில் இணைந்துள்ள மயன்க் அகர்வால், இன்றுதான் இங்கிலாந்து செல்வார். எனவே அவர் உடனடியாக இந்த போட்டியில் ஆடவைக்கப்பட வாய்ப்பில்லை. 

எனவே இந்த போட்டியிலும் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்குவார். ரிஷப் பண்ட் நான்காம் வரிசையில் இறங்குவார். கேதர் ஜாதவ் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மற்றும் புவனேஷ்வர் குமார் இறக்கப்பட வாய்ப்புள்ளது. 

டெத் ஓவர்களில் கேதர் ஜாதவால் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியவில்லை. தினேஷ் கார்த்திக் போட்டியை முடித்துவைப்பதில் வல்லவர் என்பதால் அவர் அணியில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே நிதாஹஸ் டிராபி இறுதி போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல இந்திய அணி கடந்த போட்டியில் ஆடிய அதே பர்மிங்காம் மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடக்கவுள்ளது. அந்த மைதானத்தில் பந்து அந்தளவிற்கு திரும்புவதில்லை. அதனால் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இல்லாததால் சாஹல் நீக்கப்பட்டு நல்ல ஃபார்மில் உள்ள மூன்று ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடுவது சிறந்தது என்பதால் புவனேஷ்வர் குமார் அணியில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா.