மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரை – நாளை ஒருநாள் இந்திய அணியின் வெற்றி பயணம் அட்டவணை!
பார்படாஸிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் நாளை காலை டெல்லி விமானம் வந்தடைகின்றனர்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்திய 9 ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியானது 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்தது. அமெரிக்கா, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, உகாண்டா, ஓமன், கனடா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, நேபாள், பப்புவா நியூ கினி, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடின.
இதில், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதில், கடைசியாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா மட்டுமே இறுதிப் போட்டிக்கு வந்தன. கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 176 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக இந்திய அணி 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை வென்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா நாடு திரும்பிய நிலையில் இந்திய அணி வீரர்கள் பார்படாஸில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் தான் அங்கு பெரி சூறாவளி தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான சேவை முதல் போக்குவரத்து சேவை வரையில் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இதனால், இந்திய அணி வீரர்கள் பார்படாஸிலேயே தங்கும் சூழல் நிலவியது. இதையடுத்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு பிறகு பிசிசிஐ தனி விமானம் அனுப்பியதைத் தொடர்ந்து இந்திய அணி வீர்ரகள் பார்படாஸிலிருந்து புறப்பட்டுள்ளனர். இதில், வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், வீரர்கள்து குடும்பத்தினர், பத்திரிக்கையாளர்கள் என்று அனைவரும் பார்படாஸிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து நாளை காலை 6 மணிக்கு டெல்லி வரும் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்று காலை உணவு அருந்துகின்றனர்.
அதன் பின்னர், டெல்லியிலிருந்து மும்பைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அங்கு மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் டிராபியை ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது – இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியை கௌரவிக்கும் அணிவகுப்பில் எங்களுடன் இணைந்திருங்கள். இந்த வெற்றியை கொண்டாட ஜூலை 4 ஆம் தேதி (நாளை) மாலை 5 மணி முதல் மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்திற்குச் செல்லுங்கள்! தேதியை மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரைன் டிரைவ் முதல் வான்கடேமைதானம் வரையில் உள்ள தூரம் கிட்டத்தட்ட 9.7 கிமீ. இந்த தூரம் வரையில் இந்திய அணியானது திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு செய்கிறது. கடைசியாக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.