இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. பவுலிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு, டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

ரோஹித் - ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். முதல் ஓவரை எதிர்கொண்ட ரோஹித், அந்த ஓவரில் ரன் ஏதும் அடிக்கவில்லை. இதையடுத்து இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட ராகுல், அந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். 

ரோஹித்தும் ராகுலும் அவசரப்படாமல் நிதானமாக தொடங்கினர். 14 பந்துகளை தெளிவாக எதிர்கொண்டு ஆடிய ராகுல், தனது 15வது பந்தில் ஆட்டமிழந்தார். கோட்ரெல் வீசிய 7வது ஓவரின் இரண்டாவது பந்தில் வெறும் 6 ரன்களுக்கு அவுட்டாகி சென்றார் ராகுல். நன்றாக தொடங்கிய ராகுல், நிதானமாக ஆடி அதை பெரிய இன்னிங்ஸாக ஆடாமல் நடையை கட்டினார். நல்ல ஃபார்மில் இருந்த ராகுலை விரைவில் வீழ்த்திய கோட்ரெல், அடுத்ததாக மிகப்பெரிய அதிர்ச்சியளித்தார். 

கேப்டன் விராட் கோலியையும் அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட்டாக்கினார். தான் எதிர்கொண்ட மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த கோலி, அடுத்த பந்திலேயே போல்டாகி வெளியேறினார். கோலி பவுண்டரி அடித்ததற்கு அடுத்த பந்தை, சாமர்த்தியமாக மெதுவாக வீசினார் கோட்ரெல். அதை தடுத்தாடினார் கோலி. ஆனால் பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. கோலி 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 

ராகுல் மற்றும் கோலி ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் கோட்ரெல். அதன்பின்னர் ரோஹித்துடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். ரோஹித்தும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து சிறப்பாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்திவருகின்றனர்.