ராஜ்கோட்டில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 153 ரன்கள் அடித்தது. 154 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 85 ரன்களை குவித்து இந்திய அணி எளிதாக வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார். ரோஹித் அமைத்து கொடுத்த அபாரமான தொடக்கத்தால் இந்திய அணி 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில், இலக்கை விரட்டி அதிக முறை வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் இலக்கை விரட்டி பெற்ற 41வது வெற்றி இது. இதன்மூலம் 40 முறை டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்துவிட்டது. 

வெற்றி விகிதத்திலும் இந்திய அணிதான் சிறந்து விளங்குகிறது. இந்திய அணி இலக்கை விரட்டிய 61 போட்டிகளில் 41 வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணியோ 69 டி20 போட்டிகளில் 40 வெற்றி பெற்றுள்ளது.