உலக கோப்பை தொடரின் இன்றைய இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கியுள்ளனர். வழக்கமாக நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்கும் ரோஹித் சர்மா, இந்த போட்டியில் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆட தொடங்கினார். 

வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மோர்டசா வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸர் விளாசி அதிரடியாக தொடங்கினார் ரோஹித். இருவரும் சிறப்பாக தொடங்கினர். முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய ஐந்தாவது ஓவரின் நான்காவது பந்தை தனது விருப்பமான ஷாட்டான புல் ஷாட்டின் மூலம் சிக்சருக்கு அனுப்ப நினைத்தார் ரோஹித். ஆனால் சரியாக டைமிங் செய்யாததால் மிட் விக்கெட் திசையில் கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. கஷ்டமில்லாத அந்த கேட்ச்சை தமீம் இக்பாம் கோட்டைவிட்டார். 

இங்கிலாந்துக்கு எதிராக இதே மைதானத்தில் நடந்த முந்தைய போட்டியில் ரோஹித் 4 ரன்கள் இருந்தபோது அவரது கேட்ச்சை ஜோ ரூட் மிஸ் செய்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி சதமடித்தார் ரோஹித். அதேபோலவே இந்த போட்டியிலும் ரோஹித்துக்கு ஒரு கேட்ச் விடப்பட்டுள்ளது. 

அந்த கேட்ச் விடப்பட்டதற்கு அடுத்த ஓவரிலேயே சிக்ஸர் விளாசினார் ரோஹித் சர்மா. அந்த வாய்ப்பை பயன்படுத்தி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிவருகிறார் ரோஹித் சர்மா. ரோஹித் ஒருபுறம் தாறுமாறாக அடிக்க, ஆரம்பத்தில் திணறிய ராகுலுக்கும் இரண்டு, மூன்று ஷாட்டுகள் நன்றாக கனெக்ட் ஆனதால் அவரும் அடித்து ஆடிவருகிறார். 

ரோஹித் - ராகுல் இருவருமே அடித்து ஆடிவருகின்றனர். 9வது ஓவரிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்துவிட்டது.