சிஎஸ்கே கழட்டிவிட்ட கோபத்தை களத்தில் காட்டும் தமிழக வீரர்! விஜய் ஹசாரே தொடரில் ஹாட்ரிக் சதமடித்த ஜெகதீசன்
விஜய் ஹசாரே தொடரில் தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் ஹாட்ரிக் சதமடித்து அசத்தினார். ஐபிஎல் 16வது சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணியால் ஜெகதீசன் கழட்டிவிடப்பட்ட நிலையில், விஜய் ஹசாரே தொடரில் ஜெகதீசன் ஹாட்ரிக் சதமடித்துள்ளார்.
உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் ஜெகதீசனின் அபாரமான பேட்டிங்கால் தமிழ்நாடு அணி தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது.
ஆந்திராவிற்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் சதமடித்தார். அந்த போட்டியில் 206 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் அபாரமாக ஆடி 114 ரன்களை குவித்தார். அவரது அதிரடி சதத்தால் 33வது ஓவரிலேயே இலக்கை அடித்து தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
அதன்பின்னர் சத்தீஸ்கருக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் ஆடியபோது, மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்த ஜெகதீசன் 107 ரன்களை குவித்தார். அவருடன் தொடக்க வீரராக இறங்கிய சாய் சுதர்சனும் சதமடிக்க (121), 50 ஓவரில் 340 ரன்களை குவித்த தமிழ்நாடு அணி, சத்தீஸ்கர் அணியை 326 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாக 2 சதமடித்த ஜெகதீசன், இன்று கோவாவுக்கு எதிராக ஆடிய போட்டியில், முந்தைய 2 இன்னிங்ஸ்களை விட அபாரமான இன்னிங்ஸை ஆடினார். அதிரடியாக ஆடி சதமடித்த ஜெகதீசன் 140 பந்தில் 168 ரன்களை குவித்தார். இந்த போட்டியிலும் சாய் சுதர்சனும் சதமடித்தார். சுதர்சன் 117 ரன்களை குவிக்க, 50 ஓவரில் 373 ரன்களை குவித்த தமிழ்நாடு அணி, கோவா அணியை 316 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தமிழ்நாடு அணி.
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை நேற்று சமர்ப்பித்தது. சிஎஸ்கே அணி தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ஜெகதீசனை விடுவித்தது. சிஎஸ்கே அணி அவரை விடுவித்த நிலையில், விஜய் ஹசாரே தொடரில் ரோஷத்துடன் அபாரமாக பேட்டிங் ஆடி சதங்களை விளாசிவருகிறார் ஜெகதீசன்.