தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி சூரத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, தமிழ்நாடு ஸ்பின்னர்களின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் சாய் கிஷோர். இவர்கள் இருவர் தவிர கரன் கைலாவின் விக்கெட்டையும் சாய் கிஷோர் வீழ்த்தினார். மந்தீப் சிங், அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் ஆகிய மூவரையும் சித்தார்த் வீழ்த்தினார். இதையடுத்து பஞ்சாப் அணி வெறும் 94 ரன்களுக்கு சுருண்டது. 

95 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் அதிரடியாக தொடங்கினார். 9 பந்துகளில் 16 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஷாருக்கான் 7 ரன்களிலும் பாபா அபரஜித் ரன்னே எடுக்காமலும் தினேஷ் கார்த்திக் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களில் ஹரி நிஷாந்த்தைத் தவிர மற்றவர்கள் அனைவருமே அதிகமான பந்துகளை கடத்திவிட்டு ரன்னும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 

ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. அதனால் கவனமாக ஆடியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. அதுமட்டுமல்லாமல் முக்கியமான பேட்ஸ்மேன்கள் அனைவருமே விரைவில் ஆட்டமிழந்துவிட்டதால், சுந்தர் சிறப்பாக ஆட வேண்டியிருந்தது. அந்தவகையில் பொறுப்பை உணர்ந்து வாஷிங்டன் சுந்தர் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருமுனையில் நிலைத்து நின்றார். எளிதான இலக்கு என்பதால், அவசரப்படாமல் மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடி வெற்றியை மட்டுமே இலக்காகக்கொண்டு ஆடினார் சுந்தர். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விஜய் சங்கரும் ஆடினார். 

ஆனால் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், விஜய் சங்கர் ஆட்டமிழந்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் கடைசிவரை களத்தில் இருந்ததால் வெற்றி வசமானது. 95 ரன்கள் என்ற எளிய இலக்கையே தமிழ்நாடு அணி கடைசி ஓவரில்தான் அடித்து வெற்றி பெற்றது.