ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன் – டி நடராஜன்!
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் விளையாடுவேன் என்று தமிழக வீரர் டி நடராஜன் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடிய சேலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார். ஒரு டெஸ்ட், 2 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு காயம் காரணமாக இந்திய அணியிலும் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் சென்னையில் நடந்த டிஎன்பிஎல் ஏலத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் ரூ.11.25 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த தொடர் வரும் ஜூன் ஜூலை மாதங்களில் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் தான் சேலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடராஜன் சிஎஸ்கே அணிக்காக விளையாட ஆசை இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தனது வாழ்க்கை வரலாறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறினார். ஆனால், அதற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றார்.
மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இளம் வீரர்களை அதிகம் அடையாளம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் இருப்பதால சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. தோனியிடம் பேசினாலே புத்துணர்ச்சி கிடைக்கும். டிஎன்பிஎல், ஐபிஎல் இரண்டுமே எனக்கு முக்கியம். ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் டிஎன்பில் தொடர் தான் என்னை அடையாளம் காட்டியது.
இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று கூறியுள்ளார். அப்போது அவருடன் டிஎன்பிஎல் வீரர் ஷாருக்கானும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.