பிக்பேஷ் லீக் தொடரில் ஆசிஃப் அலி 13 பந்தில் 41 ரன்களை விளாசி கடுமையாக போராடியும் கூட, கடைசியில் 6 ரன் வித்தியாசத்தில் சிட்னி சிக்ஸர்ஸிடம் தோற்றது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி.
பிக்பேஷ் டி20 லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக இந்த போட்டி 14 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.
சிட்னி சிக்ஸர்ஸ் அணி:
ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), குர்டிஸ் பாட்டர்சன், ஜேம்ஸ் வின்ஸ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (கேப்டன்), ஜோர்டான் சில்க், டேனியல் கிறிஸ்டியன், ஹைடன் கெர், சீன் அபாட், ஸ்டீவ் ஓ கீஃப், நவீன் உல் ஹக், டாட் மர்ஃபி.
IPL Mini Auction 2023: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் டாப் 5 ஆல்ரவுண்டர்கள்..! அடித்துக்கொள்ளும் அணிகள்
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி:
டார்ஷி ஷார்ட், பென் மெக்டர்மோட், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், டிம் டேவிட், ஆசிஃப் அலி, ஜிம்மி நீஷம், ஜோயல் பாரிஸ், நேதன் எல்லிஸ், பாட்ரிக் டூலே, ரைலீ மெரிடித்.
முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பாட்டர்சன் மற்றும் ஃபிலிப் ஆகிய இருவருமே அதிரடியாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவரில் 68 ரன்களை குவித்தனர். பாட்டர்சன் 25 பந்தில் 38 ரன்களும், ஜோஷ் ஃபிலிப் 21 பந்தில் 43 ரன்களும் விளாசினர். பின்வரிசையில் ஹைடன் கெர் 20 பந்தில் 32 ரன்கள் அடிக்க 14 ஓவரில் 137 ரன்கள் அடித்தது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.
14 ஓவரில் 138 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் மெக்டர்மோட்(17), டார்ஷி ஷார்ட் (13), மேத்யூ வேட் (15), ஷதாப் கான் (14) ஆகிய நால்வரும் பதின்களில் ஆட்டமிழக்க, டிம் டேவிட்(8), ஜிம்மி நீஷம் (5) இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 12.1 ஓவரில் 93 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது ஹோபர்ட் அணி.
ஆனால் கடைசி கட்டத்தில் வெறும் 13 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடிய ஆசிஃப் அலி 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாசிய ஆசிஃப் அலி 14வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழக்க, கடைசியில் 131 ரன்கள் அடித்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி.
