Asianet News Tamil

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தோனி இவருதான்..! தோனிக்கு மிக நெருக்கமான ரெய்னாவே சொல்றாருனா பாருங்களேன்

இந்திய கிரிக்கெட்டில், தோனிக்கு அடுத்த பெரிய மூளை ரோஹித் சர்மா தான் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 
 

suresh raina opines that rohit sharma is next ms dhoni in indian cricket
Author
Chennai, First Published Jul 29, 2020, 3:00 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் தோனி முக்கியமானவர். இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. கங்குலி மறுகட்டமைப்பு செய்து சிறப்பாக உருவாக்கியிருந்த இந்திய அணியை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் தோனி. 

தோனி மிகவும் கூலான கேப்டன். எப்பேர்ப்பட்ட நெருக்கடியிலும் பதற்றப்படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் எந்த சூழலையும் எதிர்கொண்டு, வீரர்களுக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கி இந்திய அணிக்கு பல அபாரமான மற்றும் த்ரில்லான வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். 2014ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியிலிருந்து விலகினார். அதன்பின்னர் கோலி கேப்டனானார். 

கோலி கேப்டனாக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த சீனியர் மற்றும் முன்னாள் கேப்டன் என்ற முறையிலும், மிகச்சிறந்த கிரிக்கெட் மூளையை பெற்றவருமான தோனி தான், இந்திய அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போதோ அல்லது பவுலர்கள் நிராயுதபாணியாக நிற்கும்போதோ அருமையான ஆலோசனையை வழங்கி ஆட்டத்தில் திருப்புமுனைகளை ஏற்படுத்துவார். 

பல நேரங்களில் தோனி அவரது உள்ளுணர்வின்படி செயல்பட்டு, அது நல்ல பலனை அளித்து இந்திய அணியும் வெற்றி பெற்றிருப்பதை பார்த்திருக்கிறோம். தோனிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற விராட் கோலி, குணாதியசத்தின் அடிப்படையில், முற்றிலும் தோனிக்கு எதிர்மாறானவர். கோலி ஆக்ரோஷமான கேப்டன். எல்லா உணர்வுகளையும் வெளிப்படையாக காட்டக்கூடியவர். இருவரது அணுகுமுறையும் வெவ்வேறு. ஆனால் தோனியுடன் ரோஹித்தின் கேப்டன்சி ஸ்டைல் ஒத்துப்போகிறது. 

தோனியை போலவே, எல்லாவிதமான சூழல்களையும் நிதானமாக கையாளக்கூடியவர் ரோஹித். வீரர்களை கையாள்வதிலும் தோனி மாதிரியான அணுகுமுறையை கொண்டவர் ரோஹித். கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிதாஹஸ் டிராபி, ஆசிய கோப்பை 2018 ஆகிய தொடர்களில் இந்திய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தி அந்த கோப்பைகளை வென்றுகொடுத்தார். ஐபிஎல்லிலும் கூட, தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே 3 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, அதைவிட ஒருமுறை கூடுதலாக 4 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ளது. 

ரோஹித்தின் கேப்டன்சி தோனியை போல் உள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனாலும் அதை தோனிக்கு மிக நெருக்கமானவரும் தோனியின் கேப்டன்சியில் அதிகமாக ஆடிய ஒரு வீரரும் சொல்லும்போது, அது இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாகிறது. அந்தவகையில் தோனி கேப்டனாக இருந்தபோது அவரது ஆஸ்தான வீரரும், தோனிக்கு மிக நெருக்கமானவரும், தோனியை பற்றி நன்றாக அறிந்தவருமான சுரேஷ் ரெய்னா, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தோனி ரோஹித் சர்மா தான் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தோனி ரோஹித் சர்மா தான். நான் ரோஹித்தை பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அமைதியாவர் ரோஹித்; மற்றவர்களின் கருத்திற்கு செவிமடுப்பார்; வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டவேண்டும் என நினைப்பார்; இவையனத்திற்கும் மேலாக அணியை முன்நின்று வழிநடத்த விரும்புவார். ஒரு கேப்டன் அணியை முன்நின்று வழிநடத்துபவராகவும், ஓய்வறை சூழலுக்கு மதிப்பளிப்பவராகவும் இருந்தால், அதைவிட ஒரு அணிக்கு வேறு என்ன வேண்டும்..? 

அணியின் ஒவ்வொரு வீரருமே கேப்டன் தான் என்ற உணர்வு ரோஹித்திடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மா கேப்டன்சியில் நான் ஆடியிருக்கிறேன். அந்த ஆசிய கோப்பையை ரோஹித்தின் கேப்டன்சியில் நாம் வென்றோம். ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், சாஹல் போன்ற இளம் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டினார் ரோஹித் சர்மா.

ரோஹித்தின் கேப்டன்சியில் வீரர்கள் மகிழ்ச்சியாக ஆடினார். அந்தளவிற்கு அருமையான சூழலை ரோஹித் சர்மா உருவாக்கியிருக்கிறார். ஓய்வறையிலும் களத்திலும் நேர்மறையான மனநிலையும் மகிழ்ச்சியான சூழலும் நிலவியது.

தோனிக்கு அடுத்து மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை ரோஹித் சர்மா. தோனியைவிட ஒரு முறை கூடுதலாக ரோஹித் சர்மா ஐபிஎல் டைட்டிலை வென்றிருக்கிறார். இருவருமே, கேப்டனாக மற்றவர்களின் கருத்துகளை கவனிப்பார்கள். மற்றவரின் கருத்திற்கு செவிமடுத்து மதிக்கும் ஒரு கேப்டன் இருந்தால், அணியில் எந்த பிரச்னையும் இருக்காது. வீரர்களின் மனரீதியான உளவியல் ரீதியான பிரச்னைகளையும் அவர்களால் தீர்க்கமுடியும். எனவே என்னை பொறுத்தமட்டில் இருவருமே அருமையான கேப்டன்கள் என்று ரெய்னா தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios