சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலிக்கு சாதனைகளை உடைத்து புதிய சாதனை படைப்பது என்பது தினசரி பணிகளில் ஒன்று போல ஆகிவிட்டது. 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அதை செய்ய தவறவில்லை. அடுத்ததாக இன்று நடக்கவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் அவருக்காக சாதனைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. 

கோலிக்காக காத்திருக்கும் சாதனைகள்:

1. இந்த உலக கோப்பையில் கோலி இதுவரை தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்துள்ளார். 2015ல் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்துள்ளார். கோலி, இதுவரை தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்துள்ள நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அரைசதம் அடித்தால், உலக கோப்பையில் தொடர்ச்சியாக 6 அரைசதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். 

2. கோலி இன்னும் 36 ரன்கள் அடித்தால் உலக கோப்பையில் ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பையில் 2278 ரன்களையும் கங்குலி 1006 ரன்களையும் குவித்திருக்கின்றனர். இன்னும் 36 ரன்கள் அடித்தால் சச்சின், கங்குலி வரிசையில் கோலி இடம்பிடிப்பார். 

3. கோலி இன்னும் 7 ரன்கள் அடித்தால் 2019ல் 1000 ரன்களை எட்டிவிடுவார். இதுவரை 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய 6 காலண்டர் ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள கோலி, இன்னும் 7 ரன்கள் அடித்தால் இந்த காலண்டர் ஆண்டில் ஆயிரம் ரன்களை எட்டிவிடுவார். அதிகமான காலண்டர் ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(7முறை) முதலிடத்திலும், கங்குலி மற்றும் பாண்டிங்(6 முறை) ஆகிய இருவரும் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். கங்குலி மற்றும் பாண்டிங்குடன் இரண்டாவது இடத்தை இதுவரை பகிர்ந்துகொண்டிருந்த கோலி, இன்னும் 7 ரன்கள் அடித்தால், முதலிடத்தை சச்சினுடன் பகிர்ந்துகொள்வார்.