ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. வரும் 7ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு இடத்தை ஒரு பிடிக்கப்போவது கேகேஆரா அல்லது சன்ரைசர்ஸா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே தலா 12 புள்ளிகளை பெற்றுள்ளன. கடைசி போட்டியில் வென்றால் பிளே ஆஃபிற்கு கண்டிப்பாக தகுதிபெற்றுவிடலாம் என்ற நிலையில் நேற்று ஆர்சிபியுடன் மோதிய சன்ரைசர்ஸ் அணி தோற்றுவிட்டது. அதனால் கேகேஆருக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இன்று மும்பைக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வென்றால் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும். அதேநேரத்தில் கேகேஆர் அணி தோற்றால் நெட் ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி தகுதிபெறும்.

ஆனால் இன்றைய போட்டியில் வென்று பிளே ஆஃபிற்கு தகுதிபெறுவதையே கேகேஆர் விரும்பும். மும்பைக்கு எதிரான முந்தைய போட்டியில் அபாரமாக ஆடி வென்றது கேகேஆர். இன்றைய போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும். அதேநேரத்தில் மும்பை அணி இன்றைய போட்டியில் வென்றால் முதல் இரண்டு இடங்களில் இடத்தை பிடிக்கும். எனவே மும்பை இந்தியன்ஸும் வெற்றி பெறும் தீவிரத்தில் தான் களமிறங்கும் என்பதால் போட்டி கண்டிப்பாக செம விறுவிறுப்பாக அமையும்.