லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தவறவிட்ட தருணம் குறித்து அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேசியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் (2), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2), சிஎஸ்கே (3) ஆகிய அணிகள் ஆடிய அனைத்து போட்டிகளிலும் தோற்று ஏமாற்றமளிக்கின்றன.
டேவிட் வார்னர், ரஷீத் கான் ஆகிய பெரிய வீரர்களை கழட்டிவிட்ட கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் படுதோல்வி அடைந்தது. நேற்று லக்னோவிற்கு எதிராக ஆடிய போட்டியில் இலக்கை நெருங்கிவந்த நிலையில், 12 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி தோல்வியடைந்தது.
ஏலத்திற்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணி இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அப்துல் சமாத், உம்ரான் மாலிக் ஆகிய இருவரையும் தக்கவைத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் தவிர இந்த 2 இளம் வீரர்களை மட்டுமே தக்கவைத்தது. உம்ரான் மாலிக் அபாரமாக பந்துவீசிவருகிறார். அவருக்கு கொஞ்சம் சாமர்த்தியம் போதவில்லை. வேகத்தில் வேரியேஷன் காட்டாததால் அவரால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அப்துல் சமாத், அவர் மீது அணி நிர்வாகம் காட்டிய நம்பிக்கைக்கு இன்னும் அர்த்தம் சேர்க்கவில்லை.
லக்னோ அணியின் அதிரடி வீரர்கள் லீவிஸ், டி காக் ஆகிய இருவருடன் மனீஷ் பாண்டே என இவர்கள் மூவரையுமே பவர்ப்ளேயில் வீழ்த்திவிட்ட சன்ரைசர்ஸ் அணி, அதன்பின்னர் கேஎல் ராகுலையும் தீபக் ஹூடாவையும் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோர் அடிக்க வைத்துவிட்டது. அவர்கள் இருவருமே அரைசதம் அடித்ததால் தான் அந்த அணி 20 ஓவரில் 169 ரன்களை குவித்தது.
170 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் ராகுல் திரிபாதி, பூரன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நன்றாக பேட்டிங் ஆடினாலும், கடைசி வரை நின்று யாரும் போட்டியை முடித்துக்கொடுக்கவில்லை. எனவே சன்ரைசர்ஸ் அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில், தோல்விக்கு பின் பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதல் போட்டியை விட இந்த போட்டியில் எங்கள் அணியின் ஆட்டம் நன்றாக இருந்தது. பவுலிங்கில் நன்றாக தொடங்கினோம். ராகுல் - தீபக் ஹூடாவை பார்ட்னர்ஷிப் அமைக்கவிடாமல் ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் இன்னும் வலுவான நிலையில் இருந்திருப்போம். அவர்கள் இருவருக்கும் கிரெடிட் கொடுத்தே தீர வேண்டும் என்று வில்லியம்சன் தெரிவித்தார்.
மேலும் இதுமாதிரி சிறிய வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்கும்போது, 1, 2 ரன்களை ஒழுங்காக ஓடி எடுத்திருந்தால் தோல்வியை தவிர்த்திருக்க முடியும் என்றார் வில்லியம்சன்.
