ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஸ்கே ஆகிய அணிகள் வெற்றிகரமான அணிகளாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இவற்றிற்கு அடுத்ததாக கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் வெற்றிகரமான நல்ல அணிகளாக திகழ்கின்றன. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 2 சீசன்களாக கேன் வில்லியம்சனின் தலைமையில் சிறப்பாக ஆடிவருகிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 7 சீசன்களாக இருந்துவந்த டாம் மூடி நீக்கப்பட்டு டிரெவர் பேலிஸ் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

டிரெவர் பேலிஸ் தலைமையில் இங்கிலாந்து அணி இப்போதுதான் உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் டிரெவர் பேலிஸின் பதவிக்காலம், ஆஷஸ் தொடருடன் முடிவடையவுள்ளது. 

இந்நிலையில், பேலிஸை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம். பேலிஸ், ஏற்கனவே கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்திருக்கிறார். இவர் பயிற்சியாளராக இருக்கும்போதுதான் கேகேஆர் அணி 2 முறை கோப்பையை வென்றது. ஐபிஎல்லில் வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ்ந்த பேலிஸ், இங்கிலாந்துக்கு கோப்பையை வென்று கொடுத்த நிலையில், தற்போது தனது பயிற்சியாளர் பணியை சன்ரைசர்ஸ் அணிக்கு வழங்கவுள்ளார். 

சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடியும் சிறப்பாகவே செயல்பட்டு அந்த அணியை நல்ல நிலைக்கு எடுத்துச்சென்றார். டாம் மூடி பயிற்சியாளராக இருந்த காலத்தில்தான் 2016ல் சன்ரைசர்ஸ் அணி ஒருமுறை கோப்பையை வென்றது.