உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் அந்த அணி வெல்வதற்கான வாய்ப்பு கூடுதலாக உள்ளது. முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் அந்த அணி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. 

இயன் மோர்கன், பட்லர், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் என இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, தவான் என இந்திய அணியின் டாப் ஆர்டர் மிகச்சிறப்பாக உள்ளது. வார்னரும் ஸ்மித்தும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம். அவர்கள் இருவரும் நல்ல ஃபார்மில் ஆடிவருகின்றனர். அதிலும் வார்னர் சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். 

இந்த உலக கோப்பையில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நான்கு சமகால ஜாம்பவான்களும் ஆடுகின்றனர். இந்நிலையில், இந்த உலக கோப்பையில் யார் அதிக ரன்கள் அடிப்பார் என்று கேள்விக்கு, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தான் தொடரில் அதிக ரன்களை குவிப்பார் என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். 

ஜோ ரூட் சிறந்த பேட்ஸ்மேன். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர். ஸ்டூவர்ட் பிராட் 2016ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. இயன் மோர்கன் தலைமையில் அணி மறுசீரமைப்பு செய்யும்போது ஆண்டர்சன், பிராட் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டனர். அதன்பிறகு பல இளம் திறமைகள் அணிக்குள் வந்தபிறகுதான் அந்த அணி ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்து ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.