இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட்டை முறையே 4 மற்றும் 8வது ஓவரில் வீழ்த்தினார் ஸ்டூவர்ட் பிராட். அதன்பின்னர் ஸ்மித்துடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற உஸ்மான் கவாஜாவை கிறிஸ் வோக்ஸ் வீழ்த்தினார். 

35 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு உடனடியாக ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஸ்மித்தும் டிராவிஸ் ஹெட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் நிதானமாகவும் கவனமாகவும் ஆடி ரன்களை சேர்த்தனர். நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்த நிலையில், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றமுடியாமல் ஹெட் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹெட்டின் விக்கெட்டுக்கு பிறகு, ஒருமுனையில் ஸ்மித் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தது. 

மேத்யூ வேட் ஒரு ரன்னிலும் கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்களிலும் பேட்டின்சன் ரன் ஏதும் எடுக்காமலும் கம்மின்ஸ் 5 ரன்களிலும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 122 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ஸ்மித்துடன் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பீட்டர் சிடில் சிறப்பாக ஆடி ஸ்மித்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதன்பின்னர் ஓரளவிற்கு அடித்து ஆடிய ஸ்மித், சதம் விளாசினார். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்மித், முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்து அசத்தினார். இது மிக மிக முக்கியமான சதமாகும்.

9வது விக்கெட்டுக்கு ஸ்மித்தும் பீட்டர் சிடிலும் இணைந்து 88 ரன்களை சேர்த்தனர். அதன்பின்னர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த நாதன் லயனும் சிறப்பாக ஆடினார். ஆனால் கடைசி விக்கெட்டாக ஸ்மித்தே 144 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது. 

நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிய கொஞ்ச நேரம் எஞ்சியிருந்த நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. நேற்று 2 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. ராயும் பர்ன்ஸும் களத்தில் உள்ளனர்.