டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித், 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடினாலும், டெஸ்ட்டில் சற்று கூடுதல் சிறப்பாக ஆடி சாதனைகளை படைத்துவருகிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் நன்றாக ஆடிய ஸ்மித், லாகூரில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக ஆடினார். 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் அடித்த ஸ்மித், 2வது இன்னிங்ஸில் 17 ரன்கள் அடித்தார்.
2வது இன்னிங்ஸில் 17 ரன்கள் மட்டுமே அடித்தாலும், டெஸ்ட்டில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை ஸ்மித் எட்டினார். 151வது டெஸ்ட் இன்னிங்ஸில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 8000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். இதற்கு முன் இலங்கை வீரர் குமார் சங்கக்கரா 152 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது. அவருக்கு ஒரு இன்னிங்ஸ் முன்பாகவே ஸ்மித் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் 154 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களை எட்டிய மாஸ்டர் பிலாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மூன்றாமிடத்தில் உள்ளார்.
