தோனியின் ஓய்வு குறித்த விவாதம் அவ்வப்போது தலையெடுத்து கொண்டே இருக்கும். உலக கோப்பை முடிந்ததும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. 

தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அவருக்கு அணியில் இனிமேல் இடம் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அந்தவகையில், இனிமேல் தோனிக்கு ஃபேர்வெல் போட்டி மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தோனியின் ஓய்வு  குறித்த விவாதம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், விராட் கோலி டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை போட்டு மீண்டும் கிளப்பிவிட்டார். 2016 டி20 உலக கோப்பையில், அரையிறுதிக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். தோனியுடன் இருக்கும் அந்த புகைப்படத்தை கோலி பதிவிட்டதை அடுத்து, தோனி ஓய்வறிவிக்க போகிறார் என்ற தகவல் வைரலாக பரவியது. இதையடுத்து தோனி ஓய்வு குறித்த தகவல் பொய்யானது என விளக்கமளிக்கப்பட்டது. 

இந்நிலையில் தோனி ஐபிஎல்லில் கேப்டனாக இருக்கும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனிடம், தோனியின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ரீனிவாசன், ஒரு விஷயத்தை மட்டும் நான் உறுதியாக கூறுவேன். அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.