தவான் பொதுவாகவே பெரிய இன்னிங்ஸ் ஆடமாட்டார். ஒருநாள் போட்டிகள் என்றால் சதம், 150 என்ற ரேஞ்சுக்கு ஆடமாட்டார். அதே டி20 போட்டியென்றால், 80-100 ரேஞ்சுக்கு ஆடமாட்டார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சம் 70-80 ரன்கள் தான் அவரது சராசரி அதிகபட்ச ஸ்கோர். கிடைக்கும் நல்ல ஸ்டார்ட்டை ரோஹித் சர்மாவை போல் பெரிய இன்னிங்ஸாக மாற்றமாட்டார். டி20யிலும் அப்படித்தான். ஆனாலும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடுவார். அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடாவிட்டாலும், அவரது அதிரடியான தொடக்கத்திற்காகத்தான் அணியில் இருக்கிறார். 

ஆனால் தற்போது அதற்கே ஆபத்து வந்துள்ளது. அண்மைக்காலமாக படுமோசமாக ஆடிவருகிறார். உலக கோப்பையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்த தவான், அந்த போட்டியில் காயமடைந்ததால் உலக கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சரியாக ஆடாத தவான், தொடர்ந்து சொதப்பிவருகிறார். 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 42 பந்துகளில் 41 ரன்கள் அடித்து பயனற்ற இன்னிங்ஸை ஆடிவிட்டுச்சென்றார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், தவானின் மந்தமான மோசமான பேட்டிங் இந்திய அணிக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. 

திறமையான இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், தனது இடத்தை தக்கவைக்க அபாரமாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் சீனியர் வீரர்கள் உள்ளனர். ரோஹித், கோலி ஆகியோரது லெவலே வேறு. எனவே அவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் தவான் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள சிறப்பாக ஆடியாக வேண்டும். அவரது ஸ்டிரைக் ரேட்டை உயர்த்துவதற்கு அவர் கண்டிப்பாக உழைக்க வேண்டும். 

தவான் ஃபார்மில் இல்லாமல் தடுமாறிவரும் நிலையில், டி20 அணியில் தவானை நீக்கிவிட்டு ராகுலை தொடக்க வீரராக இறக்கலாம் என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், டி20 போட்டிகளில் அண்மைக்காலமாக இந்திய அணி பவர்ப்ளேயில் சரியாக ஆடவில்லை. பவர்ப்ளேயில் பெரிதாக ஸ்கோர் செய்ய தவறியிருக்கிறது. ரோஹித் மட்டுமே பவர்ப்ளேயில் ஸ்கோர் செய்கிறார். தவான் தொடக்கத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கும் தனது பாணியில் தற்போது தோல்வியடைந்துவிட்டார். அணிக்கு எந்தவிதமான ஆட்டம் தேவையோ அதை வெளிப்படுத்த தவறுகிறார். 

தவான் அண்மைக்காலமாக பேட்டிங் செய்யும் விதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரது இயல்பான ஆட்டத்தை ஆடமுடியாமல் திணறிவருகிறார். டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகிவரும் நிலையில், மந்தமாக ஆடும் தவானை நீக்கிவிட்டு ராகுலை தொடக்க வீரராக இறக்க வேண்டும். ரோஹித்துடன் ராகுல் இறங்கினால், இரண்டு பேருமே அதிரடி வீரர்கள் என்பதால் பவர்ப்ளேயில் இந்திய அணியால் அதிகமான ரன்களை குவிக்க முடியும். ரோஹித்-ராகுல் ஆகியோரை தொடர்ந்து மூன்றாம் வரிசையில் கோலி இறங்குவார். நான்காம் வரிசையில் ரிஷப்பை இறக்கிவிட்டால் இந்திய அணியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.