தற்போதைய சூழலில் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. கோலி, ரோஹித், தவான், தோனி என இந்திய கிரிக்கெட் சிறப்பாக உள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துவருகிறது. வர இருக்கும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் தற்போதைய நிலை மட்டுமல்லாமல் எதிர்காலமும் மிகச்சிறப்பாக இருப்பதை அறியமுடிகிறது. கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், விஜய் சங்கர் ஆகியோருடன் இளம் துடிப்பான வீரர்களான பிரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகியோரும் அபாரமான திறமைசாலிகளாக இருப்பதால் இந்திய கிரிக்கெட்டிற்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. 

பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடியவர்கள். பிரித்வி ஷா தலைமையிலான அண்டர் 19 இந்திய அணி உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்தது. அந்த உலக கோப்பையில் ஷுப்மன் கில்லின் ஆட்டம் அபாரமானது. அந்த தொடர் முழுவதுமே சிறப்பான பங்களிப்பு செய்தார் கில்.

அண்டர் 19 உலக கோப்பையில் ஜொலித்ததை அடுத்து அவரை கேகேஆர் அணி கடந்த சீசனில் எடுத்தது. கடந்த சீசனில் பின்வரிசையில் இறங்கிய கில், கிடைத்த வாய்ப்புகளை முடிந்தவரை நன்றாகவே பயன்படுத்தி ஆடினார். அண்மையில் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் தடையில் இருந்ததால் அவருக்கு பதிலாக 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். 

இந்த சீசனின் முதல் பாதியில் பின்வரிசையில் இறங்கிய கில்லுக்கு சரியாக ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த சில போட்டிகளில் அவர் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டுவருகிறார். டாப் ஆர்டரில் இறக்கப்பட்ட பிறகு அபாரமாக ஆடிவருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 76 ரன்களை குவித்து முக்கியமான இன்னிங்ஸை ஆடினார். 

ஷுப்மன் கில்லின் பேட்டிங் விராட் கோலியை நினைவுபடுத்துவதாக ஏற்கனவே சில முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கில்லை உலக கோப்பை அணியில் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், உலக கோப்பை அணியில் கில்லுக்கு இடம் கிடைக்கவில்லை. 2011 உலக கோப்பையில் இளம் விராட் கோலியை நினைவுபடுத்துகிறார் கில். கில்லின் பேட்டிங் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. எதிர்காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வதற்கான திறமை கில்லிடம் உள்ளது என்று ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.